திருபுவனை பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கவர்னர் திடீர் ஆய்வு


திருபுவனை பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கவர்னர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Aug 2018 5:49 AM IST (Updated: 20 Aug 2018 5:49 AM IST)
t-max-icont-min-icon

திருபுவனை பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கவர்னர் கிரண்பெடி, அங்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்க கல்லூரி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.

திருபுவனை,

கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் தனியார் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நீர்நிலைகளில் ஆய்வுசெய்து, நிலத்தடி நீர் பயன்பாடு குறித்து வலியுறுத்தி வருகிறார். அதன்படி நேற்று காலை கவர்னர் கிரண்பெடி கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, கவர்னர் மாளிகை அதிகாரிகள் குழுவுடன் சென்றார்.

கல்லூரி கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளதா? என்று கவர்னர் ஆய்வு செய்தார். அப்போது பெரும்பாலான கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு இல்லாதது தெரியவந்தது. இதுபற்றி கல்லூரி நிர்வாகத்தினரிடம் விளக்கம் கேட்ட கவர்னர், வருகிற பருவ மழைக்கு முன்பாக கல்லூரியில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்கவேண்டும் என்று கல்லூரி நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார்.

மேலும் மருத்துவக் கல்லூரியில் நிலத்தடி நீர் எவ்வளவு உறிஞ்சப்படுகிறது, கழிவுநீர் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்று கேட்டார். அதற்கு கல்லூரி நிர்வாகிகள், குறிப்பிட்ட அளவு மட்டுமே நிலத்தடி நீரை பயன்படுத்துவதாகவும், கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தோட்ட செடிகளுக்கு பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, அரியூரில் உள்ள இன்னொரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கவர்னர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு ஒரு சில கட்டிடங்களில் மட்டும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தது. இதை பார்த்த கவர்னர், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புடன் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக அமைக்கப்படவில்லை. விரைவில் அனைத்து கட்டிடங்களிலும் அதனை அமைக்கவேண்டும் என்று கல்லூரி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.


Next Story