புதுச்சேரி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்கவேண்டும் - நாராயணசாமி வேண்டுகோள்


புதுச்சேரி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்கவேண்டும் - நாராயணசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 20 Aug 2018 5:58 AM IST (Updated: 20 Aug 2018 5:58 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநில எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் தங்களது ஒரு மாத சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கவேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கேரள மாநிலம் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தேசிய பேரிடராக அறிவிக்க ராகுல்காந்தி கேட்டுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு மாகி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் அரிசி, பருப்பு, மருந்துகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. கேரள மாநில மக்களுக்கு உதவிட உதவிகளை செய்யுமாறு புதுச்சேரி மக்களுக்கு கோரிக்கை வைத்தேன்.

பொதுமக்கள் அரிசி, துணிகள், மருந்து, குடிநீர், போர்வை போன்றவற்றை மனமுவந்து தரவேண்டும். எனது அழைப்பினை ஏற்று வர்த்தகர் சங்கம் ரூ.1 லட்சம் தந்தது. நிவாரண பொருட்கள் சேகரிப்பது தொடர்பாக நாளை வியாபாரிகள், தொழில் அதிபர்களை அழைத்து பேசி நிவாரண பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

கேரள மழைவெள்ளம் தொடர்பாக அம்மாநில முதல் மந்திரி, நிதி மந்திரியை தொடர்புகொண்டு பேசினேன். அங்கு வெள்ளம் வடிய 3 நாட்கள் ஆகும் என்றனர். அங்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு ரூ.500 கோடி நிவாரணம் அறிவித்துள்ளது. அவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

புதுச்சேரி மாநில எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை கேரள நிவாரண நிதிக்கு தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இதேபோல் எம்.பி.க்களும் கொடுக்க கேட்டுக்கொள்கிறேன். அரசு ஊழியர்கள் தங்கள் சம்பள பணத்தை வழங்குவது தொடர்பாக அவர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

நிவாரண பொருட்களை பெற கலெக்டர் அலுவலகத்தில் ஓரிடம் ஒதுக்கப்படும். அங்கு வந்து பொருட்களை வழங்குபவர்களுக்கு உரிய ரசீது வழங்கப்படும். காசோலை தருபவர்கள் முதல் –அமைச்சரின் நிவாரண நிதிக்கு கொடுக்கவேண்டும்.

புதுவையில் தனியார் பங்களிப்பு மூலம் அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி 58 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் கற்றுத்தர ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறோம். வருகிற 24–ந்தேதி பூரணாங்குப்பத்தில் நான் படித்த அரசுப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட உள்ளன.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பேட்டியின்போது முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.


Next Story