அழைக்கிறது அரசுப்பணி... புறப்படட்டும் மகளிர் படை!


அழைக்கிறது அரசுப்பணி... புறப்படட்டும் மகளிர் படை!
x
தினத்தந்தி 20 Aug 2018 12:56 PM IST (Updated: 20 Aug 2018 12:56 PM IST)
t-max-icont-min-icon

ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரூப்-2 பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுக்கான அறிவிக்கை வெளியிட்டு இருக்கிறது.

ஒரு மிக நல்ல செய்தி வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு இந்தியா முழுதும் நடைபெற்ற குடிமைப் பணிகள் (ஐ.ஏ.எஸ்.) தேர்வு கூட 900+ இடங்களைத்தான் வழங்கியது. ஆனால் தமிழ்நாட்டுக்குள் மட்டும், குரூப்-2 அலுவலர்கள் 1179 இடங்கள் இது மிகப் பெரிய வாய்ப்பு. நன்கு முறையாகப் பயன்படுத்திக் கொள்வோம்.

இந்த பணிகளுக்கு வருகிற செப்டம்பர் 9-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். நவம்பர் 11 காலை, முதல் நிலைத் தேர்வு நடக்கிறது. அதன் பிறகு, முதன்மைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு (oral test). கல்வித் தகுதி - ஏதேனும் ஒரு பட்டம் முடித்து இருக்க வேண்டும்.

எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம்..? இங்குதான் டி.என்.பி.எஸ்.சி. தனித்து விளங்குகிறது. பொதுப் பிரிவினர் அல்லாத, எஸ்.சி. எஸ்.டி. மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உச்ச வயது வரம்பு கிடையாது. 58 வயதிலும் அரசுப் பணிக்குள் நுழைய முடியும்.

குறிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டியது, இஸ்லாமிய சமயத்தைத் தேர்ந்த சிறுபான்மையினர், மேற்சொன்ன வயது விலக்குப் பிரிவுக்குள் அடங்குவர். அதாவது, பட்டப் படிப்பு முடித்த இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும், 58 வயது வரையில் கூட, டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று தமிழக அரசுத் துறையில் பணியில் சேரலாம். இந்தச் செய்தியைப் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும்.

அரசுத் துறைகளில் பணி புரிகிற இஸ்லாமியச் சகோதரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. மொத்த பணியாளர் எண்ணிக்கையில் ஒரு சதவீதம் கூட இல்லை. ஆசிரியப் பணி தவிர்த்து, பிற துறைகளில் அறவே இல்லை எனலாம். இந்த நிலை மாறுவது அனைவருக்குமே நல்லது.

அரசுப் பணி என்பது ஊதியத்துக்கான ஒரு வழி மட்டுமே அன்று. அது, அதிகாரத்தின் அடையாளம் (a symbol of empowerment). ஒரு ஜனநாயகக் குடியரசில், அரசுத் துறைகளில் அனைத்து பிரிவினரும் போதுமான பிரதிநிதித்துவம் கொண்டு இருத்தல் வேண்டும். அப்போதுதான் நியாய அநியாயங்களைப் புரிந்து நடக்கிற நிர்வாகம் சாத்தியப்படும். அங்கேதான் எல்லாருக்கும் பொதுவான சமநீதி கிடைக்கும்.

சமய நம்பிக்கைகள், மரபுகள், பழக்க வழக்கங்களைக் கேள்வி கேட்பது நமது நோக்கம் அன்று. நிறைய படித்து நல்ல திறமையுடன் விளங்குகிற சகோதரிகள், அரசுப் பணிக்கு வருவதால், அரசு நிர்வாகத்தில் 'தர மாற்றம்' ஏற்படும்; பல முன்னேற்றங்களுக்கு வழி கோலும்.

பிற சமூகத்தைச் சேர்ந்த மகளிருக்கும் இந்தக் கோரிக்கை பொருந்தும். அதிகளவில் பெண்கள் அரசுப் பணிக்கு வருவதால், ஊழல் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கலாம். அலுவலகங்களுக்கு வரும் சாமான்யர்களுக்கு, கனிவான பதிலும் மென்மையான அணுகுமுறையும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் கூடும்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தை விடவும், தமிழ்நாட்டில் பெண் கல்வி, உச்ச நிலையை எட்டி உள்ளது. பட்டி தொட்டிகளில் கூட படித்த பெண்கள் மிகுந்துள்ளனர். இவர்களின் அறிவும் புலமையும் திறமையும் வீண் ஆகலாமா...? இவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பு, அவர்களின் குடும்பத்துக்கும் உதவ வேண்டும்; நாட்டுக்கும் பயன் பட வேண்டும்.

பணிப் பாதுகாப்பு, சட்ட பூர்வ நடைமுறைகள், விடுமுறை, மருத்துவ வசதிகள், எந்த விதத்திலும் தனி மனித உரிமைகளைப் பறிக்காத அலுவலக விதிமுறைகள்... எல்லாம் சேர்ந்து, அரசுப் பணி, மகளிருக்கு முற்றிலும் பொருந்தி வருகிற ஒன்றாகத் திகழ்கிறது.

இதோ... செப்டம்பர் 9 நெருங்கிக் கொண்டு இருக்கிறது. சற்றும் தாமதிக்க வேண்டாம். www.tnpsc.gov.in www.tnpscexams.net www.tnpscexams.in ஆகிய மூன்று இணையங்களில் ஏதேனும் ஒன்றின் மூலம், ‘ஆன்லைன்' விண்ணப்பம் சமர்ப்பிக்கவும்.

'ஒரு முறைப் பதிவு' கட்டணம் ரூபாய் 150 மட்டுமே.அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு இது செல்லும். இது அல்லாமல், தேர்வுக் கட்டணம் சுமார் 100 ஆகலாம். நலிந்த பிரிவினருக்கு இக்கட்டணம் இல்லை. பிற்படுத்தப் பட்டோருக்கு, முதல் மூன்று தேர்வுகளுக்கு கட்டணம் இல்லை.

பாடப் புத்தகங்கள், செய்தித் தாள்கள் போன்றவை இருந்தால் போதும். கடந்த தேர்வுகளின் வினாத் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்தனை பாடங்களும் வழிகாட்டுக் குறிப்புகளும் இணையத்தில் இலவசமாகவே கொட்டிக்கிடக்கின்றன. வேறென்ன வேண்டும்...? வீட்டில் இருந்த படியே தயார் செய்து கொள்ளலாம்.

சுயமாகப் படித்து சொந்தமாகத் தயாரித்து, வெற்றி பெறுவதற்கு ஏற்ற போட்டித் தேர்வு உண்டு எனில் அது, 'டி.என்.பி.எஸ்.சி.' தேர்வுதான்.

புறப்படட்டும் மகளிர் படை. அரசுத் துறைகளை நிரப்பட்டும்.

புதிய சரித்திரம் படைக்கட்டும் தமிழ்நாடு!

வாழ்த்துகள்.

- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

Next Story