ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா


ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா
x
தினத்தந்தி 21 Aug 2018 4:30 AM IST (Updated: 21 Aug 2018 12:05 AM IST)
t-max-icont-min-icon

ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் துப்புரவு பணியில் மாநகராட்சி பணியாளர்களுடன் ஒப்பந்த பணியாளர்கள் 260 பேரும் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.232 வழங்கப்படுகிறது. இந்த ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடமும், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினரும் பணியாளர்கள் மனு அளித்தனர். ஆனால் ஊதியம் உயர்த்தி வழங்கப்படவில்லை.

இதனால் ஒப்பந்த பணியாளர்கள் 50–க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) காளிமுத்துவை ஒப்பந்த பணியாளர்கள் சிலர் நேரில் சென்று தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.


அப்போது அவர், தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் தான் நீங்கள் கோரிக்கை வைக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து எந்த பலனும் இல்லை என்று கூறினார். இதைத்தொடர்ந்து ஒப்பந்த பணியாளர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இன்று(செவ்வாய்க்கிழமை) தனியார் ஒப்பந்த நிறுவனத்தினரும் பேச்சுவார்த்தை நடத்துவோம். எங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால் கலெக்டரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று ஒப்பந்த பணியாளர்கள் தெரிவித்தனர்.

Next Story