கோரிக்கையை வலியுறுத்தி அரியலூரில் அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டம்


கோரிக்கையை வலியுறுத்தி அரியலூரில் அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2018 4:00 AM IST (Updated: 21 Aug 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூரில் அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டமும், அரியலூரில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

அரியலூர்,

மத்திய அரசு, டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் பணப்படிகளுக்கு இணையாக தமிழ்நாடு அரசு அனைத்து டாக்டர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டாக்டர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று மதியம் பெரம்பலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் அர்ச்சுனன் தலைமையில் டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது டாக்டர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆனந்தமூர்த்தி, பொருளாளர் முருகானந்தம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுதாகர், பொருளாளர் தனபால், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுசின் உள்பட டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் அர்ச்சுனன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு அனைத்து டாக்டர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றி தர வேண்டும். இல்லையென்றால் வருகிற 24-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி கோரிக்கையை வலியுறுத்தி டாக்டர்கள் ஊர்வலம் நடைபெறும்.

வருகிற 27-ந்தேதி பிரசவம், உள்நோயாளிகள் சிகிச்சை, அவசர சிகிச்சை தவிர மற்ற புறநோயாளிகள் சிகிச்சை, அவசரமில்லா அறுவை சிகிச்சை பணிகளில் டாக்டர் கள் ஈடுபடாமல் வேலை நிறுத்த போராட்டமும், அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந்தேதி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி ஊர்வலமும் நடத்தவுள்ளோம். அப்படியும் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லையென்றால் செப்டம்பர் 21-ந்தேதி எந்தவித சிகிச்சை பணிகளிலும் ஈடுபடாமல் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.

இதேபோல் வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாவட்ட தலைவர் டாக்டர் கண்ணன் தலைமையில், அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு அரசு மருத்துவர்கள் சங்க அரியலூர் மாவட்ட தலைவர் டாக்டர் கொளஞ்சிநாதன் தலைமை தாங்கினார். கோரிக்கையை நிறைவேற்ற அரசே வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பினர். இதில் தலைமை டாக்டர்கள் ரமேஷ் கண்ணன், உமா, மறைதென்றல், விக்னேஷ், மேகநாதன் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாக்டர்களும் கலந்து கொண்டனர்.

Next Story