தனது சேமிப்பு பணத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமிக்கு சைக்கிள் பரிசு
சேமிப்பு பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய விழுப்புரம் சிறுமிக்கு சைக்கிளை பரிசாக வழங்கிய ‘ஹீரோ’ சைக்கிள் நிறுவனம், ஆண்டுதோறும் புதிய சைக்கிள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
விழுப்புரம்,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரத்தை சேர்ந்த சிவசண்முகநாதன்- லலிதா தம்பதியின் மகள் அனுப்பிரியா (வயது 8) தான் சைக்கிள் வாங்க 4 ஆண்டுகளாக உண்டியல்களில் சிறுக, சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.8,246-ஐ கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்த சிறுமிக்கு நேரடியாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இதை பார்த்த ‘ஹீரோ’ சைக்கிள் நிறுவனம் அனுப்பிரியாவின் நற்செயலை பாராட்டி அவருக்கு பரிசாக சைக்கிள் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி விழுப்புரத்தில் உள்ள அந்த சைக்கிள் நிறுவனம் மூலமாக அனுப்பிரியாவுக்கு ரூ.5 ஆயிரத்து 400 மதிப்புள்ள சைக்கிளை பரிசாக அந்நிறுவனத்தின் தென்னிந்திய பொது மேலாளர் மனோஜ்குமார் வழங்கி சிறுமியின் ஆசையை நிறைவேற்றி பாராட்டினார்.
அனுப்பிரியாவின் மனிதாபிமானத்தை பாராட்டி ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பங்கஜ் எம்.முஞ்சால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ‘அனுப்பிரியா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தேவையான நேரத்தில் உதவிக்கரம் நீட்டிய உனது மனிதாபிமான செயலை பாராட்டுகிறோம். சைக்கிள் வாங்குவதற்காக சேமித்த பணத்தை வழங்கிய உனது நற்செயலை பாராட்டி எங்கள் நிறுவனம் சார்பில் உனக்கு சைக்கிள் வழங்குகிறோம். உனது வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வருடமும் புதிய சைக்கிளை எங்கள் நிறுவனம் வழங்கும்’ என்று கூறியுள்ளார்.
இது குறித்து அனுப்பிரியா கூறியதாவது:-
நான் விழுப்புரத்தில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறேன். எனது வீட்டின் அருகில் இருக்கும் சிறுவர்கள் சைக்கிள் ஓட்டி விளையாடுவதை பார்த்து எனக்கும் சைக்கிள் வாங்க ஆசையாக இருந்தது. இதற்காக நான் உண்டியல் வாங்கி அதில் பணத்தை சேமிக்க ஆரம்பித்தேன். 4 ஆண்டுகளாக எனது பெற்றோர் எனக்கு தினமும் கொடுக்கும் பணத்தை சிறுக, சிறுக உண்டியல்களில் சேமித்து வந்தேன். 4 உண்டியல்கள் நிரம்பி 5-வது உண்டியலும் நிரம்ப இருந்தது.
என்னுடைய பிறந்த நாள் அக்டோபர் 16-ந் தேதி வருகிறது. அன்று உண்டியல்களில் உள்ள பணத்தின் மூலம் சைக்கிள் வாங்க இருந்தேன். இந்நிலையில் கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை டி.வி.யில் பார்த்தேன். ஒரு குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்தபோது எனக்கும் அழுகை வந்தது.
இதனால் எனக்கு சைக்கிள் வாங்குவதை விட கேரள மக்களுக்கு உதவி செய்தால் நல்லது என நினைத்து உண்டியல்களில் சேமித்து வைத்திருந்த பணத்தை வெள்ள நிவாரணத்துக்கு வழங்கும்படி பெற்றோரிடம் கூறினேன். என்னுடைய செயலை பாராட்டி சைக்கிள் வழங்கியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story