ஆட்டுக்குட்டியை பிடிக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்த பெண்


ஆட்டுக்குட்டியை பிடிக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்த பெண்
x
தினத்தந்தி 21 Aug 2018 3:15 AM IST (Updated: 21 Aug 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே ஆட்டுக்குட்டியை பிடிக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்டனர்.

வடமதுரை, 

வடமதுரை அருகே உள்ள சிங்காரக்கோட்டையை சேர்ந்தவர் வெள்ளையம்மாள்(வயது30). இவர் காணப்பாடியை சேர்ந்த ஒருவரின் தோட்டத்தில் தங்கியிருந்து ஆடுகள் மேய்த்து வந்தார். நேற்று மாலை அவர் மேய்த்து வந்த ஆட்டுக்குட்டி ஒன்று ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் மண் சரிவில் சிக்கிக்கொண்டது. அந்த ஆட்டுக்குட்டியை பிடித்து வருவதற்காக வெள்ளையம்மாள் கிணற்றின் ஓரத்திற்கு சென்றுள்ளார். 

அப்போது மண் சரிந்து சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தார். கிணற்றில் தண்ணீர் இல்லாததால் கிணற்றுக்குள் விழுந்த வெள்ளையம்மாள் பலத்த காயமடைந்தார். அவரது சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது வெள்ளையம்மாள் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பது தெரியவந்தது. கிணற்றில் படிக்கட்டுகள் இல்லாததால் அவரை மீட்க முடியவில்லை.

இது குறித்து வடமதுரை போலீசாருக்கும், வேடசந்தூர் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி கண்ணன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி வெள்ளையம்மாளை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதன்பின் அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிணற்றில் சிக்கிய ஆட்டுக்குட்டியையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். 

Next Story