இரும்பு உருக்கு ஆலையில் பாய்லர் குழாய் வெடித்து 2 பேர் பலி


இரும்பு உருக்கு ஆலையில் பாய்லர் குழாய் வெடித்து 2 பேர் பலி
x
தினத்தந்தி 21 Aug 2018 4:00 AM IST (Updated: 21 Aug 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே தனியார் இரும்பு உருக்கு ஆலையில் பாய்லர் குழாய் வெடித்து, 2 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த படூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு ஆலை உள்ளது. இங்கு பீகாரைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 25), மத்திய பிரதேசத்தை சேர்ந்த பப்பு (26) ஆகியோர் வேலை செய்து வந்தனர்.

கடந்த 14–ந் தேதி ஆலையில் இருவரும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாய்லரில் வெப்பம் அதிகமானதால், அதன் குழாய் திடீரென வெடித்தது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த இவர்கள் இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேஷ், பப்பு இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து ஆலையின் மேலாளர் அருள்ஜோதி உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story