துப்புரவு பணியாளர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும்


துப்புரவு பணியாளர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 21 Aug 2018 4:15 AM IST (Updated: 21 Aug 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

துப்புரவு பணியாளர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் மலர்விழி சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அதிகாரிகளிடம் வழங்கிய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தர்மபுரி மாவட்ட முனிசிபல் பஞ்சாயத்து பொதுபணியாளர்கள் சங்கம் சார்பில் கொடுத்த கோரிக்கை மனுவில், திடக்கழிவு மேலாண்மை பணியில் ஈடுபடும் பெண் துப்புரவு பணியாளர்களுக்கு மாதம் ஒரு முறை சோப்பு, ஆண்டுதோறும் சீருடை, காலணி மற்றும் சுகாதார கருவிகள் வழங்க வேண்டும். வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் முதுநிலை வரிசைபடி துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். பேரூராட்சி துப்புரவு பணியாளர்களின் குறைகள், கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று கோரியிருந்தனர்.

பாலக்கோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், மத்திய அரசின் பிரதான்மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் இலவசமாக வழங்க வேண்டிய கியாஸ் சிலிண்டர், கியாஸ் அடுப்பு, ரெகுலேட்டர் ஆகியவற்றை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியுள்ள பயனாளிகள் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும்போது அலைக்கழிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே அரசு விதிமுறைப்படி தகுதியுள்ளவர்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.

கடத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தர்மபுரி மாவட்டத்தில் ஏரிகள், குளங்கள் தண்ணீரின்றி வறண்டு உள்ளன. எனவே காவிரி ஆற்றின் உபரி நீரை தர்மபுரி மாவட்ட ஏரிகள், குளங்களில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இந்த திட்டம் மூலம் கடத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்று கோரியிருந்தனர்.

Next Story