நான்குவழிச்சாலைக்கு எதிர்ப்பு: மதுரையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மதுரையில் நான்குவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை,
மதுரையை அடுத்த வாடிப்பட்டியில் இருந்து அலங்காநல்லூர் வழியாக சிட்டம்பட்டி வரை அமைக்கப்படும் நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பென்னிகுவிக் இருபோக பாசன விவசாயிகள் மற்றும் நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண் சங்க தலைவர் சுவாமிநாதன் பேசியதாவது:– வாடிப்பட்டியில் தொடங்கி அலங்காநல்லூர் வழியாக சிட்டம்பட்டி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த வழியில் முல்லைப் பெரியாறு இருபோக பாசன விவசாய நிலங்கள் 500 ஏக்கருக்கும் மேல் உள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்ட கிணறுகள், கண்மாய்களும் இந்த பகுதிகளில் உள்ளன. மதுரையின் நெற்களஞ்சியமாகத் திகழும் வாடிப்பட்டி, அலங்காநல்லூர் பகுதி விளைநிலங்களை அழித்துவிட்டு நான்கு வழிச்சாலை அமைவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதனால் சுமார் 5 ஆயிரம் விவசாயிகள் அகதிகளாக மாறும் நிலை உருவாகும்.
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையும் மூடப்படக்கூடிய நிலை ஏற்படும். ஆகையால் தமிழக அரசு மாற்று வழியில் இந்த நான்குவழி சாலையை அமைப்பதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த போராட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோசமிட்டனர்.