8 ஏக்கர் நெல் பயிர்கள் நாசம்: ஓய்வு பெற்ற ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை


8 ஏக்கர் நெல் பயிர்கள் நாசம்: ஓய்வு பெற்ற ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Aug 2018 3:10 AM IST (Updated: 21 Aug 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

8 ஏக்கர் நெல் பயிர்கள் நாசமானதால் மனம் உடைந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆலத்தூர் அருகே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

கொழிஞ்சாம்பாறை,

பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள அரூரை சேர்ந்தவர் பழனன் (வயது 81). ஓய்வு பெற்ற அதிகாரி. இவருக்கு சொந்தமாக 8 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடன் வாங்கி நெல் நாற்றுகளை நடவு செய்து இருந்தார். இந்த நிலையில் பாலக்காடு மாவட்டத்தில் கடந்த 1 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது.

இதில் இவருடைய வயலில் மழை வெள்ளம் புகுந்தது. மேலும் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நின்றதால் 8 ஏக்கர் வயலில் நடப்பட்ட நெல் நாற்றுகள் அழுகின.

இதனால் பழனன் மிகவும் கவலை அடைந்தார். இதையொட்டி கடந்த சில தினங்களாக மிகவும் சோகமாக காணப்பட்டார். தான் வாங்கிய கடனை எப்படி அடைக்கப்போகிறேன் என்று உறவினர்களிடம் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதையொட்டி அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவர் தனது வயலுக்கு அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பழனன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story