பொள்ளாச்சியில் குறை தீர்ப்பு கூட்டம்: இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், சப்–கலெக்டரிடம் மனு


பொள்ளாச்சியில் குறை தீர்ப்பு கூட்டம்: இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், சப்–கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 21 Aug 2018 4:30 AM IST (Updated: 21 Aug 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும் என்று கோரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சப்–கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது பொள்ளாச்சி அழகப்பா காலனியை சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட அழகப்பா காலனியில் தனியார் தோட்டத்து பகுதியில் வசித்து வந்தோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் நாங்கள், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தங்கி உள்ளோம். எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் நல்லூத்துக்குளி அரிஜன காலனி பொதுமக்கள் கொடுத்த மனுவில்,அரிஜன காலனியில் 100–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் தற்போது பெய்து வரும், மழைக்கு 20 வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. 5 வீடுகள் இடிந்து விட்டது. ஆனால் அதிகாரிகள் யாரும் வந்து வீடுகளை ஆய்வு செய்யவில்லை. எனவே வீடுகளை நேரில் வந்து ஆய்வு செய்து உரிய இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறி உள்ளனர்.

ம.தி.மு.க. கோவை மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சேதுபதி மற்றும் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பொள்ளாச்சி பகுதியில் பெய்து வரும் கன மழையால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் ரே‌ஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர். மேலும் ரே‌ஷன் கடை பொருட்களை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.

எனவே ரே‌ஷன் கடைகளில் ஆய்வு நடத்தி அரசு வழங்கும் பொருட்கள் பொதுமக்களுக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும் அரிசி உள்ளிட்ட பொருட்களை கூடுதலாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story