மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி நாமக்கல்லில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி நாமக்கல்லில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2018 4:15 AM IST (Updated: 21 Aug 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல்,

நாமக்கல்லில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் கேட்டு அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில செய்தி ஆசிரியர் டாக்டர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் லீலாதரன், மாவட்ட செயலாளர் டாக்டர் ரகுகுமரன், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட பொருளாளர் டாக்டர் கார்த்திக்கேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் அனைத்து அரசு டாக்டர்களுக்கும் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் பணப்படிகள் வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் டாக்டர் ரங்கநாதன் கூறியதாவது:- கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டமாக போராட்டங்களை நடத்தி வருகிறோம். இன்று (நேற்று) நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 20 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம்.

வருகிற 24-ந் தேதி இதை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி டாக்டர்கள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம். அதேபோல் 27-ந் தேதியில் இருந்து வட்டார, மாவட்ட மாநில அளவிலான அனைத்து விதமான திறனாய்வு கூட்டங்கள், வகுப்புகள், எம்.சி.ஐ. மேற்பார்வை பணிகள் மற்றும் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டப்பணிகள் ஆகியவற்றை புறக்கணிக்க உள்ளோம். இவை எதற்கும் அரசு செவி சாய்க்காத பட்சத்தில் வரும் செப்டம்பர் 12-ந் தேதி தலைமை செயலகத்தை நோக்கி நடைபயணம் மேற்கொள்ளவும், வரும் செப்டம்பர் 21-ந் தேதி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு எடுத்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

வெண்ணந்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் நேற்று மதியம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு டாக்டர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். பணப்படிகளை மத்திய அரசு டாக்டருக்கு இணையாக மாநில அரசு மருத்துவர்களுக்கும் வழங்கிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Next Story