தொடர் வெள்ளப்பெருக்கால் முண்டந்துறை ஆற்றுப்பாலத்தில் விரிசல்


தொடர் வெள்ளப்பெருக்கால் முண்டந்துறை ஆற்றுப்பாலத்தில் விரிசல்
x
தினத்தந்தி 21 Aug 2018 3:00 AM IST (Updated: 21 Aug 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக, முண்டந்துறை ஆற்றுப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. அதை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

விக்கிரமசிங்கபுரம்,


நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து காரையாறு, சேர்வலாறு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வழியில், முண்டந்துறையில் ஆற்றுப்பாலம் ஒன்று இருந்தது. கடந்த 1992-ம் ஆண்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, அந்த பாலம் இடிந்து விழுந்தது.
இதையடுத்து அங்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. தற்போது வரை அந்த பாலம்தான் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்த வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகிறார்கள்.


இந்த நிலையில், கடந்த சில நாட்களாக செய்த கனமழை காரணமாக, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தொடர் வெள்ளப்பெருக்கில் மரக்கட்டைகள் உள்ளிட்டவை அடித்து வரப்பட்டன. அவற்றால் அந்த பாலத்தின் ஒரு தூணில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
அதை உடனடியாக சீரமைக்காவிட்டால் விரிசல் விரிவடைந்து பாலம் இடிந்து விழக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, அந்த பாலத்தை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story