காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Aug 2018 3:15 AM IST (Updated: 21 Aug 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், 


விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு புதுக்காலனியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காணை ஊராட்சி ஒன்றியம் சார்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்படுத்தப்படும் மின் மோட்டார் கடந்த மாதம் பழுதானது. இதன் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காணை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை குடிநீர் வினியோகம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த புதுகாலனி பகுதி பொதுமக்கள் நேற்று காலை 10 மணியளவில் காலி குடங்களுடன் நன்னாடு பஸ் நிறுத்தம் அருகில் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த், ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காணை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமேல்அழகர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பழுதான மின் மோட்டார் அகற்றப்பட்டு ஓரிரு நாளில் புதிய மின் மோட்டார் பொருத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதையேற்ற பொதுமக்கள் அனைவரும் காலை 10.40 மணியளவில் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அங்கு 40 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Next Story