தண்ணீர் இன்றி கருகிய கரும்பு பயிர்கள் விவசாயிகள் கவலை
தியாகதுருகம் பகுதியில் கரும்பு பயிர்கள் தண்ணீர் இன்றி கருகின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே வடதொரசலூர், பிரிதிவிமங்கலம், வாழவந்தான்குப்பம், வேங்கைவாடி, சிறுநாகலூர், சித்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதி விவசாயிகள் கரும்பு, மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட பயிர்களை சுழற்சி முறையில் சாகுபடி செய்து வருகின்றனர்.
அதன்படி கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இப்பகுதி விவசாயிகள் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் 10 மாத பயிரான கரும்பு சாகுபடி செய்தனர். பின்னர் அவற்றுக்கு கிணற்று தண்ணீர் மூலம் பாசனம் செய்து, கலை எடுத்தல், உரம் இடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் தியாகதுருகம் பகுதியில் மழை போதிய அளவில் பெய்யாமல் பொய்த்து போனது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததுடன், கிணறுகளும் தண்ணீர் இன்றி வறண்டன. இதன் காரணமாக கரும்பு பயிர்களுக்கு போதிய அளவில் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.
இந்நிலையில் சுமார் 4 அடி உயரம் வரை நன்கு செழித்து வளர்ந்த கரும்பு பயிர்கள், தற்போது தண்ணீர் இன்றி கருகி வருகின்றன. இதனால் அதிக செலவு செய்து பராமரித்து வந்த கரும்பு பயிர்கள் தங்கள் கண் முன்னே கருகி வருவதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் சில விவசாயிகள் கரும்பு தோட்டங்களுக்குள் மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், நான் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிணற்று நீரை நம்பி சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்தேன். அதற்காக வங்கியில் கடன் வாங்கி ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து பராமரித்து வந்தேன். கடந்த 2 மாதங்களாக கிணற்றில் தண்ணீர் இல்லாததால் கரும்பு பயிர்களுக்கு பாசனம் செய்ய முடியவில்லை. இதனால் நான் 3 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த கரும்பு பயிர்கள் தண்ணீர் இன்றி கருகின.
இதனால் வங்கியில் வாங்கிய கடனை எப்படி திரும்ப செலுத்துவது என்று தெரியவில்லை. எனது நிலத்தை போல் தியாகதுருகம் பகுதியில் சுமார் 500 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த கரும்பு பயிர்கள் முற்றிலும் கருகின. அதனால் பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கெடுத்து, அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story