தந்தையை கொலை செய்த வாலிபர் கைது சாமி சிலையை விற்று மது குடித்ததால் ஆத்திரம்


தந்தையை கொலை செய்த வாலிபர் கைது சாமி சிலையை விற்று மது குடித்ததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 21 Aug 2018 4:40 AM IST (Updated: 21 Aug 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

சாமி சிலையை விற்று மது குடித்த தந்தையை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புனே,

புனே, சிங்காட் ரோட்டில் உள்ள கால்வாயில் கடந்த 12-ந் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவரது உடல் மீட்கப்பட்டது. விசாரணையில் அவர் வட்காவ் பகுதியை சேர்ந்த பாபு (வயது40) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் பாபுவின் மகன் கன்பத் சோன்யாவை (19) பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்தான் தந்தையை கொலை செய்து உடலை கால்வாயில் வீசிய அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பாபு மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். அவர் மது குடித்துவிட்டு மகன் கன்பத் சோன்யாவை அடித்து சித்ரவதை செய்து வந்து உள்ளார். சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன் பாபு, மகன் ஆசை ஆசையாக வீட்டில் வாங்கி வைத்திருந்த சாய்பாபா சிலையை விற்று மது குடித்து உள்ளார்.

இதுகுறித்து கன்பத் சோன்யா கேட்ட போது பாபு அவரை அடித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தந்தை பாபுவை சப்பாத்தி கட்டையால் அடித்தும், தலையணையால் முகத்தை அழுத்தியும் கொலை செய்து உடலை கால்வாயில் வீசியது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் கன்பத் சோன்யாவை கைது செய்தனர்.

Next Story