கலெக்டர் முன்பு மண்எண்ணெய் ஊற்றி வாலிபர் தீக்குளிக்க முயற்சி - மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பரபரப்பு


கலெக்டர் முன்பு மண்எண்ணெய் ஊற்றி வாலிபர் தீக்குளிக்க முயற்சி - மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Aug 2018 11:22 PM GMT (Updated: 20 Aug 2018 11:22 PM GMT)

திருவண்ணாமலையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் முன்பு மண்எண்ணெய் ஊற்றி வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொது மக்களிடம் இருந்தும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் நேரில் பெற்றுக் கொண்டார். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 574 மனுக்கள் பெறப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், நிலுவையில் உள்ள மனுக்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிக் கொண்டிருக்கும் போது மனு அளிக்க வந்த ஒரு வாலிபர், கலெக்டர் முன்பு சென்று திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் பேண்ட் பாக்கெட்டில் கவரில் கட்டி மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்த அரசு அலுவலர்கள் அந்த வாலிபரை மீட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவண்ணாமலை வேங்கிக்கால் தென்றல் நகரைசேர்ந்த பரசுராமன் (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து பரசுராமன் தனது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்கினார். மனுவை பெற்று கொண்ட கலெக்டர், இதுபோன்ற தற்கொலை முயற்சிகள் மேற்கொள்வது தவறு என்று அறிவுரை வழங்கினார்.

பரசுராமன் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் எம்.எஸ்சி., பி.எட். படித்து உள்ளேன். திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு கடையில் ஜெராக்ஸ் கடை வைக்க மாதம் ரூ.2,500 வாடகை என்று பேசி ரூ.50 ஆயிரம் அட்வான்ஸ் (முன்பணம்) செலுத்தினேன். கடை உரிமையாளர் அட்வான்ஸ் பெற்று கொண்டதற்கான அக்ரிமெண்ட் போடாமல் காலம் தாழ்த்தி வந்தார். இதையடுத்து நானும் ஜெராக்ஸ் கடைக்கு தேவையான பொருட்களை கடையில் வாங்கி வைத்தேன். சில நாட்கள் கழித்து கடையை காலி செய்து கொடு என்று கடையில் இருந்த பொருட்களை கடை உரிமையாளர் உள்பட சிலர் வெளியே எடுத்து வீசினர்.

மேலும் கடைக்கு நான் கொடுத்த அட்வான்ஸ் பணத்தையும் கடை உரிமையாளர் கொடுக்காமல் காலம் கடத்தி வருகிறார். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தால், கடை உரிமையாளருக்கு சாதகமாக போலீசார் செயல்பட்டு நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். எனவே எனது பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெறும் கூட்டரங்கம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரை அழைத்து, என்ன பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறீர்கள் என்று கலெக்டர் கடிந்து கொண்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, தனித்துணை கலெக்டர் சமூக பாதுகாப்புத்திட்டம் உமாமகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story