திருப்பூரில் மாநகராட்சி பள்ளியின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
திருப்பூரில் மாநகராட்சி பள்ளியின் பூட்டை உடைத்து பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று உள்ளனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் பூண்டி ரிங் ரோடு அருகே 3 செட்டிபாளையத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 285 மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியை உள்பட 8 ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகிறார்கள். கடந்த 16–ந் தேதி மாலையில் பள்ளி முடிந்ததும் பள்ளி தலைமை ஆசிரியை தரணி மற்றும் ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளியை பூட்டி விட்டு சென்று விட்டனர். அதை தொடர்ந்து விடுமுறை முடிந்து நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு ஆசிரியை ஜெயந்திக்கு சென்றார்.
அப்போது பள்ளி தலைமை ஆசிரியை அறை கதவில் பூட்டப்பட்டு இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனே தலைமை ஆசிரியைக்கும், 15 வேலம்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தலைமை ஆசிரியை அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு இருந்த 2 பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ.500 மற்றும் டேப் ஒன்று காணாமல் போயிருந்தது. அவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
அது மட்டுமல்லாமல் பள்ளியில் உள்ள 6 வகுப்பறை கதவுகளும், அங்கன்வாடி மையத்தின் கதவும் திறந்து கிடந்தது. இதையடுத்து போலீசார் அந்த வகுப்பறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு எந்த பொருளும் திருட்டு போகவில்லை. பின்னர் அங்கன் வாடி மையத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது, அங்கிருந்த அரிசி, பருப்பு, கடலை எண்ணெய், முட்டை உள்ளிட்டவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பதும் தெரியவந்தது. சம்பவத்தன்று நள்ளிரவு நேரம் பள்ளியின் சுற்றுச்சுவர் மீது ஏறிக்குதித்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் தலைமை ஆசிரியை அறை மற்றும் அங்கன்வாடி மையத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட்டில் ஈடுபட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையத்து 15 வேலம்பாளையம் போலீசில் தலைமை ஆசிரியை தரணி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்குள் சென்ற ஆசாமிகள் பசியோடு சென்று இருப்பார்கள் போலும். இதனால் அங்கிருந்து முட்டைகளை பார்த்தும் ஆம்ளேட் போட்டு சாப்பிட ஆசை வந்துள்ளது. இதையடுத்து லாவகமாக அங்கிருந்த கியாஸ் அடுப்பை பற்ற வைத்து, மூட்டைகளை உடைத்து ஆம்ளேட் போட்டு சாப்பிட்டு உள்ளனர். உடைத்த முட்டை கூடுகளை ஆங்காங்கே அறை முழுவதும் வீசாமல் குப்பை தொட்டியில் போடப்பட்டுள்ளது. ஆம்ளேட் போட்டு சாப்பிட்ட பின்னர் அந்த ஆசாமிகள் கியாசை அடைத்து விட்டு சென்று உள்ளனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.