தனுஷ், ஸ்ரீதேவி படங்களில் நடித்தவர் நடிகை சுஜாதா குமார் திடீர் மரணம்


தனுஷ், ஸ்ரீதேவி படங்களில் நடித்தவர் நடிகை சுஜாதா குமார் திடீர் மரணம்
x
தினத்தந்தி 21 Aug 2018 5:26 AM IST (Updated: 21 Aug 2018 5:26 AM IST)
t-max-icont-min-icon

இந்தி பட உலகில் பிரபல நடிகையாக இருந்தவர் சுஜாதா குமார். இவர் தனுஷ் நடித்து தமிழ், இந்தியில் வெளியான ராஞ்சனா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

ஸ்ரீதேவி, அஜித்குமார் நடித்து தமிழ், இந்தி மொழிகளில் வந்த இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவியின் சகோதரியாக நடித்து இருந்தார்.

கரண் ஜோகரின் ‘கோரி தோரே பியார் மெய்ன்’ உள்பட மேலும் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். டி.வி. தொடர்களிலும், ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து உள்ளார். இந்தி நடிகையும் பிரபல இயக்குனர் சேகர்கபூரின் முன்னாள் மனைவியுமான சுசித்ராவின் சகோதரி சுஜாதா குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஜாதா குமாருக்கு சில வருடங்களுக்கு முன்னால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். நோய் முற்றியதால் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.

சுஜாதா குமார் மறைவுக்கு திரையுலகினரும் சின்னத்திரை நடிகர்-நடிகைகளும் இரங்கல் தெரிவித்தனர். அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் நேற்று ஜுகுவில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Next Story