ஈரோடு மேட்டூர் ரோட்டில் சாலை அமைக்கக்கோரி வியாபாரிகள் மறியல் போராட்டம்


ஈரோடு மேட்டூர் ரோட்டில் சாலை அமைக்கக்கோரி வியாபாரிகள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2018 5:31 AM IST (Updated: 21 Aug 2018 5:31 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மேட்டூர் ரோட்டில் சாலை அமைக்கக்கோரி வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மேட்டூர் ரோட்டில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. அந்த பணிகள் முடிந்தும் தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளன. இதனால் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் அதிகமான வாகனங்கள் சென்று வருவதால் புழுதி பறக்கிறது. எனவே தார் சாலை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 10.45 மணிஅளவில் வியாபாரிகள் மேட்டூர் ரோட்டில் திரண்டனர். அவர்கள் தார் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்டியப்பன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே மேட்டூர் ரோட்டில் போலீசார் போக்குவரத்தை மாற்றி அமைத்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் கூறும்போது, ‘‘மேட்டூர் ரோட்டில் தார்சாலை அமைக்கப்படாததால் புழுதி பறக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. மேலும் புழுதி பறப்பதால் சாலையில் நடந்து செல்லக்கூட முடியவில்லை. குறிப்பாக ஓட்டல்கள், பழமுதிர்சோலைகள், பேக்கரிகளில் உணவு பொருட்களில் புழுதி படிவதால் பொதுமக்களுக்கு சுகாதாரமான பொருட்களை வழங்க மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும்’’, என்றனர்.

அதற்கு போலீசார், ‘‘சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சாலை மறியல் போராட்டத்தை கைவிட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து வியாபாரிகள் மறியலை கைவிட்டு சாலையோரமாக கூடினார்கள். ஆனால் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் முகத்தில் ‘மாஸ்க்’ அணிந்தபடி சாலையோரமாக நின்று கோ‌ஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே மறியல் போராட்டத்தை வியாபாரிகள் கைவிட்டதை தொடர்ந்து மேட்டூர் ரோட்டில் வழக்கம்போல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. ஆனால் வியாபாரிகள் கலைந்து செல்லாததால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் வியாபாரிகளின் போராட்டம் பற்றிய தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் வியாபாரிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

அதைத்தொடர்ந்து அவர்கள் மத்தியில் அதிகாரிகள் பேசும்போது, ‘‘ஈரோடு மேட்டூர் ரோட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்தது. அப்போது ஒவ்வொரு பகுதியாக பணிகள் முடிய, முடிய தார் சாலை அமைக்கலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் பாதாள சாக்கடை அமைக்கும்போது ஒருசில இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. எனவே உடனடியாக தார் சாலை அமைக்க முடியவில்லை. தற்போது பணிகள் முழுமையாக நிறைவடைந்து இருப்பதால் ஒரு வாரத்திற்குள் தார் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’, என்றனர்.

அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக்கொண்ட வியாபாரிகள், ‘‘தார்சாலை அமைக்கும் வரை புழுதி பறக்காத வகையில் தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்’’, என்றனர். அதற்கு, ‘‘மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறி தினமும் 2 முறை தண்ணீர் தெளிக்கப்படும்’’, என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர். அதன்பின்னர் வியாபாரிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக ஈரோடு மேட்டூர் ரோட்டில் சுமார் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, ‘‘ஈரோடு மேட்டூர் ரோட்டில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். மேலும், கடைகளுக்கு முன்பு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை அமைக்க வேண்டும்’’, என்றனர்.


Next Story