நரசிங்கபுரம் நகராட்சி குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவதை கைவிட வேண்டும், கலெக்டரிடம் மனு


நரசிங்கபுரம் நகராட்சி குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவதை கைவிட வேண்டும், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 21 Aug 2018 6:48 AM IST (Updated: 21 Aug 2018 6:48 AM IST)
t-max-icont-min-icon

நரசிங்கபுரம் நகராட்சி குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவதை கைவிட வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

சேலம், 

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் ரோகிணியிடம் மனு அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், உரிய விசாரணை நடத்தி தீர்வுகாணுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 13, 14-வது வார்டில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர், அவர்கள் தங்களது குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் ரோகிணியிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நரசிங்கபுரம் நகராட்சியில் 13 மற்றும் 14-வது வார்டில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். காவிரி குடிநீர் வினியோகம் செய்வதற்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைந்துள்ளது. ஆனால் நகராட்சி சார்பில் குப்பை கழிவுகளை பிரித்து உரமாக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நுண் உரம் செயலாக்க மையம் அமைக்கவும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் அருகில் பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. நுண் உரம் செயலாக்க மையம் அமைந்தால் அதன்மூலம் ஏற்படும் சுகாதார சீர்கேடு காரணமாக நுரையீரல் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதோடு, கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் தாக்கமும் அதிகம் ஏற்படும். எனவே, குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவதை கைவிட வேண்டும். அதற்கு பதில் பள்ளிக்கூடம், குடியிருப்புகள் இல்லாத இடத்தில் அமைக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆத்தூர் அருகே சதாசிவபுரம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மாவட்ட கலெக்டர் ரோகிணியிடம் பணம் மோசடி தொடர்பாக ஒரு புகார் மனுவை அளித்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதாவது:-

ஆத்தூரில் அங்கன்வாடியில் சமையலராக பணிபுரியும் பெண் ஒருவர் மூலம் தனியார் காப்பீடு நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ.500 செலுத்தி வந்தோம். தற்போது 5 ஆண்டுகள் முடிவடைந்ததால் எங்களுக்குரிய முதிர்வு தொகையை கேட்டபோது, அவர் பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்திடம் கேட்டபோது, சரியான முறையில் பதில் தெரிவிக்க மறுக்கிறார்கள். மொத்தம் ரூ.5½ லட்சம் வரை மோசடி நடந்துள்ளது. எனவே, எங்களுக்கு வர வேண்டிய காப்பீட்டு தொகை பணத்தை முகவராக செயல்பட்ட அங்கன்வாடி சமையலரிடம் இருந்து பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க வந்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story