தாமிரபரணியில் இருந்து மானூர் குளத்துக்கு கால்வாய் அமைக்க வேண்டும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு


தாமிரபரணியில் இருந்து மானூர் குளத்துக்கு கால்வாய் அமைக்க வேண்டும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 21 Aug 2018 8:33 AM GMT (Updated: 21 Aug 2018 8:33 AM GMT)

தாமிரபரணி ஆற்றில் இருந்து மானூர் குளத்துக்கு கால்வாய் அமைக்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

நெல்லை, 

தாமிரபரணி ஆற்றில் இருந்து மானூர் குளத்துக்கு கால்வாய் அமைக்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

குறை தீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவசேனா தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். அங்கு பொதுமக்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே பஸ்நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இரவு நேரத்தில் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.

அடிப்படை வசதிகள்

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்பபாண்டியன் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், ‘நெல்லையை அடுத்த ராமையன்பட்டி பஞ்சாயத்து கண்டியப்பேரி அருகில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 1,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. அங்கு 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு வாழும் மக்களுக்கு குடிநீர், மின்விளக்கு, சாலை, கழிப்பிடம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.

மானூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘சமீபத்தில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சிற்றாற்றில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் கடலில் வீணாக கலந்தது. ஆனால் சிற்றாறு பாசனத்தில் உள்ள மானூர் குளம் நிறையவில்லை. அதனால் தாமிரபரணி ஆற்றில் இருந்து மானூர் குளத்துக்கு தனி கால்வாய் அமைக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.

பணி நிரந்தரம்

நெல்லையை அடுத்த தருவையை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘எங்கள் கிராமத்தில் நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்த வீடு கிடையாது. எனவே தமிழக அரசின் இலவச மனை பட்டா வழங்க வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ‘நாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் ஷில்பாவை சந்தித்து மனு கொடுத்தனர்.

Next Story