ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் வைகோ பேட்டி


ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 22 Aug 2018 3:30 AM IST (Updated: 21 Aug 2018 5:30 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று வைகோ கூறினார்.

தூத்துக்குடி, 

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று வைகோ கூறினார்.

தூத்துக்குடியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வரும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 22 ஆண்டுகளாக போராடி வருகிறேன். தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் தரப்பில் வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களை கொண்டு வந்து கலவரம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். மக்கள் தாங்களாக வந்து போராடிய போராட்டம். இது யாருடைய தூண்டுதலிலும் நடக்கவில்லை என்பதை வலியுறுத்தினேன்.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தீர்ப்பாயம் முடிவு செய்தது. 2 வாரத்துக்குள் கமிட்டி அமைக்கப்படும், 4 வாரத்துக்குள் அந்த குழு அனைத்து அம்சத்தையும் விசாரித்து முடிவு தெரிவிப்பார்கள் என்று தீர்ப்பாயம் கூறி உள்ளது. அதற்கு ஸ்டெர்லைட் தரப்பு வக்கீல் தமிழக நீதிபதிகள் யாரையும் நியமிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்கள்.

கொள்கை முடிவு

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அதன் மூலம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சட்டமாக்கி, என்னென்ன காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று கூறி மூடப்பட வேண்டும். அந்த முடிவு எடுக்காத நிலையில், நீதித்துறை மூலம் ஆலையை திறக்க முயற்சி செய்வார்கள் என்று கூறினேன். தற்போது, ஆலையை திறக்க நிர்வாகம் அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து வருகிறது. ஆனால் தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார மக்கள் மனநிலை ஆலைக்கு எதிராக உள்ளது என்பதுதான் உண்மை.

ஆலையை திறக்க வேண்டும் என்று மனு கொடுப்பதில் உண்மை இல்லை என்பது மக்களுக்கு தெரியும். தமிழக அரசு ஸ்டெர்லைட் விவகாரத்தை சரியாக அணுகவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு கொடுக்க வருபவர்களை தடுப்பது ஜனநாயகம் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

கோர்ட்டில் ஆஜர்

முன்னதாக, கடந்த 2009–ம் ஆண்டு தூத்துக்குடியில் நடந்த புதிய அனல்மின் நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை மற்றும் நிதித்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி வந்தார். அவரை கண்டித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வைகோ உள்பட 159 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி 2–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் வைகோ உள்பட 70 பேர் மாஜிஸ்திரேட்டு பிஸ்மிதா முன்னிலையில் நேற்று ஆஜர் ஆனார்கள்.

தள்ளிவைப்பு

அப்போது, இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட சாட்சிகள் அடிப்படையில், பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த குற்றச்சாட்டுகளுக்கு 70 பேரும் மறுப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற 27–ந் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு பிஸ்மிதா தள்ளிவைத்தார். அன்று இருதரப்பு வாதம் நடைபெறுகிறது. இந்த வழக்கில் வைகோ தரப்பில் வக்கீல் ஜோசப் செங்குட்டுவன் ஆஜர் ஆனார்.


Next Story