தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவரின் பெயருக்கு சம்மன் அனுப்பிய விசாரணை ஆணையம் சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவரின் பெயருக்கு, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஆணையம் சம்மன் அனுப்பியது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவரின் பெயருக்கு, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஆணையம் சம்மன் அனுப்பியது. இது சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
துப்பாக்கி சூடு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22–ந் தேதி பொதுமக்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். அப்போது, ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் இறந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த விசாரணை ஆணையம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.
பலியானவரின் பெயரில் வந்த சம்மன்
இந்த ஆணையத்தின் அதிகாரி அருணா ஜெகதீசன் அடுத்த வாரத்தில் மீண்டும் தூத்துக்குடியில் வைத்து விசாரணை நடத்துகிறார். இதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியான தூத்துக்குடி அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்த கிளாஸ்டன் (வயது 42) என்பவர் பெயருக்கு, அவருடைய வீட்டுக்கு சம்மன் வந்தது.
அந்த சம்மனில், ‘‘வருகிற 29–ந் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் அரசு சுற்றுலா மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். தங்களுடன், தங்கள் அனுமதி, அங்கீகாரம் பெற்ற ஒரு நபர் அல்லது வக்கீல் மட்டும் அழைத்து வர அனுமதிக்கப்படுகிறீர்கள். உங்களுடைய தரப்புக்கு ஆதரவாக இருக்கும் என்று நீங்கள் கருதும் ஆவணங்கள் அனைத்தையும் விசாரணை ஆணையத்தின் முன் சமர்ப்பிக்கலாம். மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாள அட்டை எடுத்து வரவேண்டும். விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராக தவறினால் தாங்கள் இல்லாமலேயே விசாரணை ஆணையம் விசாரணையை மேற்கொண்டு முடிவு செய்யும்‘‘ என்று கூறப்பட்டு இருந்தது. இதை பார்த்த கிளாஸ்டன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதிகாரிகள் விளக்கம்
இந்த சம்மன் நகல், வாட்ஸ்–அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தவறாக சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதை அறிந்த விசாரணை ஆணைய அதிகாரிகள் இறந்தவரின் குடும்பத்துக்கு வேறு ஒரு சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘சம்மனில் இறந்தவர் பெயரை அடைப்புக்குறிக்குள் எழுதாததால் தவறு நடந்து உள்ளது. இந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டு அவரது குடும்பத்துக்கு வேறு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது‘ என்றனர்.
Related Tags :
Next Story