பெண்களிடம் நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
கடலூரில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யபட்டார்.
கடலூர்,
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் கடந்த 18–ந் தேதி வண்டிப்பாளையம் சாலை மகாலட்சுமிநகரை சேர்ந்த தீனதயாளன் மனைவி அகிலபிரியா(வயது 33), வெள்ளிமோட்டான்தெருவை சேர்ந்த சதீஷ்குமார் மனைவி ஜோதி(19), பவுனாம்பாள்நகரை சேர்ந்த ஜெகதாம்பாள்(75) ஆகியோரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்தனர். கடலூரில் ஒரே நாளில் 3 பெண்களிடம் நகை பறித்த பரபரப்பு சம்பவம் குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஜீவாநகரை சேர்ந்த சுரேஷ்(23), சென்னை சுனாமிகுடியிருப்பை சேர்ந்த சுரேஷ்குமார்(29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கடலூர் முதுநகர் சிங்காரதோப்பை சேர்ந்த முருகன் மகன் நிவேக்(21) என்பதும், இவர் 3 பெண்களிடம் நகைபறிப்பு வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நிவேக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 பவுன் சங்கிலி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.