கடைகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
விழுப்புரம் நகராட்சியில் ரூ.1½ கோடி வரையில் குடிநீர் வரிபாக்கி உள்ளது. இந்த நிலையில் வரி செலுத்தாதவர்களில் கடைகளுக்கு வழங்கப்பட்டு இருந்த குடிநீர் இணைப்பை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகளில் உள்ள வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மொத்தம் நகராட்சி சார்பில் 8 ஆயிரத்து 69 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இணைப்பு பெற்றவர்கள் 3 மாதத்திற்கு ஒருமுறை நகராட்சிக்கு குடிநீர் வரி செலுத்த வேண்டும். ஆனால் நகரில் 3 ஆயிரம் பேர் வரை குடிநீர் வரியை நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். அதாவது ரூ.1 கோடியே 59 லட்சம் அளவிற்கு குடிநீர் வரியை செலுத்தாமல் பாக்கி உள்ளது தெரியவந்தது.
இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சிக்கு குடிநீர் வரியை செலுத்தாமல் 100 பேர் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் பாக்கி வைத்துள்ளனர். இந்த இணைப்புகளை துண்டிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். நேற்று நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜா உத்தரவின்பேரில் வருவாய் அலுவலர் சவுந்தர்ராஜன், வருவாய் ஆய்வாளர்கள் சோமசுந்தரம், நாராயணசாமி, வருவாய் உதவியாளர்கள் வீரபிரகாஷ், பாபு, பாலு, அமர்நாத் ஆகியோர் விழுப்புரம் நேருஜி சாலை, திரு.வி.க. வீதி உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளுக்கு பெறப்பட்ட குடிநீர் இணைப்புகளில், வரிபாக்கி வைத்துள்ளவர்களின் இணைப்புகளை அதிரடியாக துண்டித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நகராட்சிக்கு குடிநீர் வரி செலுத்தாமல் உள்ளவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கும் பணி நேற்று முதல் தொடங்கி இருக்கிறது. இந்த பணி தொடர்ந்து நடைபெறும். முதற்கட்டமாக கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளில் வரி செலுத்தாதவர்களின் இணைப்புகள் துண்டிக்கப்படுகிறது.
இதை தொடர்ந்து, வீடுகளிலும் இணைப்புகள் துண்டிக்கப்பட இருக்கிறது. எனவே வரி பாக்கி வைத்துள்ள அனைவரும் உடனடியாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரியை செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றனர்.