மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாடூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் முருகன் (வயது 40), கிணறு வெட்டும் தொழிலாளி. இவர் தியாகதுருகம் அருகே மடம் கிராமத்தை சேர்ந்த மணி ரெட்டியார் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தார்.
அந்த வகையில் நேற்று காலை முருகன் மற்றும் சில தொழிலாளர்கள் வழக்கம் போல் கிணற்றுக்குள் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கிணற்றில் சிறிதளவு தண்ணீர் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தொழிலாளி ஒருவர் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்கினார். அப்போது மின்கசிவு காரணமாக கிணற்றில் இருந்த சிறிதளவு தண்ணீரிலும் மின்சாரம் பாய்ந்திருந்தது. இதுபற்றி அறியாத முருகன் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அந்த தண்ணீரில் மிதித்ததும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கிணற்றுக்குள் பிணமாக கிடந்த முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story