செட்டிப்பட்டறை ஏரியில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பண்ருட்டி செட்டிப்பட்டறை ஏரியில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. வாகனங்கள் மூலம் பயிர்கள் அழிக்கப்பட்டன.
பண்ருட்டி,
பண்ருட்டியில் செட்டிப்பட்டறை ஏரி உள்ளது. பண்ருட்டி, திருவதிகை, மாளிகைமேடு, மேல்கவரப்பட்டு, எல்.என்.புரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 242 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரி இருந்தது. மழைக்காலத்தில் செட்டிப்பட்டறை ஏரியில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு மாளிகைமேடு, பண்ருட்டி, எல்.என்.புரம், ஏரிப்பாளையம் ஆகிய பகுதிகள் பாசன வசதி பெற்று வந்தது. காலப்போக்கில் ஏரியை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிக்க தொடங்கினர். தற்போது இந்த ஏரியில் 138 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. மேலும் நெல், கரும்பு, மரவள்ளி, சவுக்கு போன்றவைகளையும் பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். பொதுப்பணித்தறைக்கு சொந்தமான 242 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, ஆக்கிரமிப்பால் 50 ஏக்கராக சுருங்கியது. 192 ஏக்கர் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி இருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை சார்பில் ஏரியை காலிசெய்யக்கோரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அதனை பொருட்படுத்தாமலும், ஆக்கிரமிப்பாளர்கள் காலிசெய்யாமலும் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் 4 பொக்லைன் எந்திரங்களுடன் செட்டிப்பட்டறை ஏரிக்கு வந்தனர். அங்கிருந்த வீடுகளை இடித்து தரைமட்டமாக்கும் பணி தொடங்கியது. அதேபோல் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம், ஏரியில் சாகுபடி செய்திருந்த பயிர்களை அழித்து சமப்படுத்தினர். சில வயல்களில் கரும்பு மற்றும் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. அவைகளும் பொக்லைன் மற்றும் டிராக்டர் மூலம் அழிக்கப்பட்டது.
இந்த பணி நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. அப்போது வீடுகளை அகற்றியபோது, அதில் வசித்து வந்தவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றனர். அதற்கு பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம், அதற்கான பணிகள் முழுமையாக நடைபெற்று வருகிறது. விரைவில் வழங்கப்படும் என்றார். இதையடுத்து வருவாய்த்துறையினர், மாற்று இடம் வழங்குவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஏரி ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்களில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story