திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறப்பு, விவசாயிகள் மகிழ்ச்சி


திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறப்பு, விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 22 Aug 2018 4:00 AM IST (Updated: 22 Aug 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உப்பாறு அணை உள்ளது. இந்த அணையின் பரப்பளவு 1,100 ஏக்கர் ஆகும். அணையின் நீர்த்தேக்க அளவு 21 அடியாகும். இந்த அணையின் இடது கரை மதகு மூலமாக 3 ஆயிரத்து 538 ஏக்கரும், வலது கரை மதகு மூலமாக 2 ஆயிரத்து 516 ஏக்கரும் மறைமுகமாக 15 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இந்த அணை மூலமாக பனமரத்துப்பாளையம், சின்னையகவுண்டம்பாளையம், வெங்கிட்டிபாளையம், தொப்பம்பட்டி, வரப்பாளையம், குள்ளாய்பாளையம், ஆலாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் பாசன வசதி பெறுகிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும்போது உப்பாறு அணைக்கு தண்ணீர் கிடைத்தது. பி.ஏ.பி. வாய்க்கால் மூலமாகவும் தண்ணீர் கிடைத்தது.

பி.ஏ.பி. பாசனம் 4 மண்டலமாக விரிவுபடுத்தப்பட்டபோது அணைக்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டது. கடந்த 1990–ம் ஆண்டுக்கு பிறகு அணை தண்ணீர் இல்லாமல் வறண்டது. திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை, திருமூர்த்தி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் உப்பாறு அணை ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடந்தது. எனவே திருமூர்த்தி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை அரசூர் ‌ஷட்டர் பகுதிக்கு கொண்டு வந்து அங்கிருந்து உப்பாறு அணைக்கு உயிர்த்தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து விரிவான செய்தி தினத்தந்தி நாளிதழில் கடந்த 20–ந் தேதி பிரசுரமானது.

திருமூர்த்தி அணை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து 20, 21–ந் தேதிக்குள் உபரி நீர் விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்தார்கள்.

இந்தநிலையில் திருமூர்த்தி அணை பிரதான கால்வாயில் இருந்து உபரிநீர் 46 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசூர் ‌ஷட்டர் பகுதிக்கு நேற்று இரவு வந்தது. பின்னர் ‌ஷட்டர் திறக்கப்பட்டு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் உப்பாறு அணைக்கு செல்கிறது. 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் 57 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் உள்ளது. உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் வழியோர கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கொசவம்பாளையம், ஆமந்தக்கடவு, பூளவாடி, பெரியபட்டி உள்பட பல்வேறு கிராமங்கள் வழியாக உப்பாறு அணைக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் இடையில் உள்ள தடுப்பணைகள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றனர். உப்பாறு அணைப்பகுதி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, திருமூர்த்தி அணையில் இருந்து வினாடிக்கு 400 கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டு அரசூர் ‌ஷட்டர் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு வந்து சேர்ந்தது. பின்னர் ‌ஷட்டர் திறக்கப்பட்டு உப்பாறு அணையை நோக்கி தண்ணீர் செல்கிறது. நேற்று மதியம் வரை 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் பாய்ந்துள்ளது. இரவுக்குள் தண்ணீர் உப்பாறு அணையை எட்டும்.

உப்பாறு அணையில் 500 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்க முடியும். நாளை(வியாழக்கிழமை) திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அதுவரை அணையில் இருந்து உபரி நீர் உப்பாறு அணைக்கு திறக்கப்படும். 140 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலமாக உப்பாறு அணைக்கு 100 மில்லியன் கன அடி தண்ணீர் கிடைக்கும். பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டு முடிந்த பிறகு அமராவதி அணையின் நீர் அளவை பொறுத்து உப்பாறு அணைக்கு மீண்டும் தண்ணீர் திறப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றனர்.


Next Story