நான்கு வழிச்சாலையில் நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாராமுகம்
விபத்து பகுதியான கலெக்டர் அலுவலகம் முன்பு நான்கு வழிச்சாலையில் நடைமேம்பாலம் அமைக்க கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னரே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாராமுகமாகவே உள்ளது.
விருதுநகர்,
விருதுநகர்–சாத்தூர் இடையே விபத்து பகுதியாக கலெக்டர் அலுவலகம் முன்பும், படந்தால் விலக்கும் கண்டறியப்பட்டதன் பேரில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2014–ம் ஆண்டு நடைமேம்பாலம் அமைக்க தலா ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. திட்டப்பணி தொடங்கும் நாள் அன்று பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதால் திட்டப்பணி முடங்கும் நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்த நடைமேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படாமலே இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு இறுதியில் விருதுநகரில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய இணை மந்திரி பொன்ராதாகிருஷ்ணனிடம் இப்பிரச்சினை குறித்து எடுத்து கூறப்பட்டதன்பேரில் விருதுநகர்–சாத்தூர் இடையே 2 இடங்களிலும் நடைமேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன் பின்னர் நடைமேம்பாலம் அமைக்க வேண்டிய இடங்களில் மண் பரிசோதனை போன்ற ஆய்வுகளை மேற்கொண்ட தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் தொடர் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இது குறித்து பல்வேறு அமைப்புகளும் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு வலியுறுத்தி மனுக்கள் அனுப்பிய போதிலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாராமுகமாகவே உள்ளது. இதற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு வாகன போக்குவரத்தை முறைப்படுத்த தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் நான்கு வழிச்சாலையில் விரைவாக வரும் வாகனங்கள் பல சந்தர்ப்பங்களில் தடுப்பு வேலிகளில் மோதும் நிலையும், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மீதும் மோதி விபத்துக்களை ஏற்படுத்தும் நிலையும் தொடர்கிறது. நேற்று முன்தினம் நெல்லையில் இருந்து வேகமாக வந்த கார் கலெக்டர் அலுவலகம் முன்பு தடுப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏதும் ஏற்படவில்லை. போலீசார் காரை ஓட்டி வந்த மூணாரை சேர்ந்த மோகனசுந்தரம் (வயது 39) என்பவரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். நான்கு வழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் கலெக்டர் அலுவலகம் முன்பு போக்குவரத்தை கண்காணிக்க நிறுத்தப்பட்டு இருக்கும் போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே தொடர்கிறது.
எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கலெக்டர் அலுவலகம் முன்பு மேலும் தாமதிக்காமல் நடைமேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இல்லையேல் கலெக்டர் அலுவலகம் முன்பு வாகன விபத்துக்களால் அடிக்கடி உயிர் பலி ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.