அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்வு - நாராயணசாமி அறிவிப்பு


அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்வு - நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2018 5:15 AM IST (Updated: 22 Aug 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் இந்தியாவில் அமல்படுத்திய இரண்டே மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்று. புதுவை அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்வதிலும் உறுதுணையாக இருக்கும். அரசு ஊழியர்களின் நலன் கருதி 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை 1.1.2016 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தி ஊதிய உயர்வு அளித்தது.

இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படியை உயர்த்தி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதுவை மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி நகர பகுதியில் வசிக்கும் ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி அடிப்படை சம்பளத்தில் 16 சதவீதம் வழங்கப்படும்.

புதுச்சேரியின் இதர பகுதிகளிலும், காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 8 சதவீதம் வீட்டு வாடகை படியாக வழங்கப்படும். இது உடனடியாக அமலுக்கு வரும். நடப்பு மாதம்(ஆகஸ்டு) சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும். இதன் மூலம் புதுச்சேரி நகர பகுதியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி மாதத்திற்கு ரூ.3,600ல் இருந்து அவரவர் பதவிக்கு ஏற்றவாறு ரூ.23 ஆயிரம் வரை கிடைக்கும்.

நகர பகுதியில் இல்லாத அரசு ஊழியர்களுக்கு ரூ. 1800ல் இருந்து ரூ.11,500 வரை அவரவர் பதவிக்கு ஏற்றவாறு வீட்டு வாடகை படி கிடைக்கும். இதன் மூலம் 28 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு மாதத்திற்கு ரூ.5 கோடி முதல் ரூ.6 கோடி வரை கூடுதல் செலவாகும். புதுவை அரசு ஊழியர்களுக்கு பக்ரீத் பண்டிகை பரிசாக இந்த வீட்டுவாடகைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் ரூ.60 லட்சம் செலவில் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டன. ஆனால் காரைக்கால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்துள்ளது. திருமலைராயன் ஆறு, அரசல் ஆறு, முல்லையாறு, நட்டாறு, நூலாறு ஆகியவற்றில் தண்ணீர் வருகிறது. ஆனால் நண்டலாறு பகுதிக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. இதற்கு காரணம் காரைக்காலை ஒட்டியுள்ள தமிழக பகுதியில் தூர்வாரவில்லை. அங்கு தண்ணீர் வரும் வழியில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. எனவே அதனை அகற்றி தூர்வார வேண்டும் என்று தமிழக முதல்–அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளேன்.

காரைக்கால் பகுதி விவசாயிகள் தற்போது நெல் பயிர் செய்ய 100 டன் விதை நெல் தற்போது கைவசம் இருப்பு உள்ளது. விதை நெல்லுக்கு கிலோவிற்கு ரூ.10 மானியம் வழங்கப்படும். தற்போது உரம் 150 டன் இருப்பு உள்ளது. அதற்கு மானியம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். எனவே காரைக்கால் பகுதி விவசாயிகள் விதை நெல் மற்றும் உரத்திற்கு தமிழகத்திற்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது.

ஏனாமில் உள்ள கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 14½ அடி உயரத்திற்கு ஆற்றில் தண்ணீர் செல்கிறது. இதனால் கரையோரம் உள்ள 20 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு இருந்து நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் வெள்ளத்தில் சிக்கி இறந்ததாக கூறப்படும் புதுவை போலீஸ் ஏட்டு தேவ் ஆனந்த் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் அவர் எவ்வாறு இறந்தார் என்ற விவரம் தெரிய வரும். மேலும் விசாரணை அறிக்கை வந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவரது குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே புதுவை அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்த்தியதை முன்னிட்டு அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Next Story