புரோக்கர்களிடம் பணம் கொடுத்து இளைஞர்கள் ஏமாற வேண்டாம்
சேலத்தில் ராணுவத்திற்கான ஆள் சேர்க்கும் முகாம் நடைபெறுவதையொட்டி புரோக்கர்களிடம் பணம் கொடுத்து இளைஞர்கள் ஏமாற வேண்டாம் என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சேலம்,
இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்க்கும் முகாம் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நள்ளிரவே தொடங்கியது. வருகிற 2-ந் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் சேலம், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக ஆன்லைன் மூலம் 34 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். முதல்நாளான்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை கலெக்டர் ரோகிணி பார்வையிட்டார். அப்போது அவர் அங்கிருந்த ராணுவ அதிகாரிகளிடம் இளைஞர்களுக்கு என்னென்ன உடல்தகுதி நடைபெறுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் ரோகிணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ராணுவத்திற்கான ஆள் சேர்க்கும் முகாம் தற்போது நடைபெறுகிறது. இந்த முகாமில் பங்கேற்பதற்காக ஆன்லைன் மூலம் 34 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். தினமும் 3,500 பேர் அனுமதிக்கப்படுவார்கள். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இளைஞர்களின் நலன் கருதி உடல்தகுதி தேர்வு நள்ளிரவே தொடங்கி விடும்.
குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட வசதிகள் அனைத்துத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராணுவ பணிக்காக புரோக்கர்களிடம் பணம் கொடுத்து இளைஞர்கள் ஏமாற வேண்டாம். தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த மைதானத்தில் 3 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராணுவ தரப்பிலும் உடல்தகுதி தேர்வை வீடியோ மூலம் பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது அருகில் இந்திய ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு இயக்குனர் கர்னல் ஆர்.ஜே.ரானே, போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை உள்பட பலர் உடன் இருந்தனர். ராணுவத்திற்கான ஆள் சேர்க்கும் முகாம் நள்ளிரவே தொடங்கியதால் நேற்றே ஏராளமான இளைஞர்கள் மைதானத்துக்கு வர தொடங்கி உள்ளனர். இவர்களில் பலர் மைதானத்தையொட்டி உள்ள சாலையோரத்தில் படுத்து தூங்கினர். இந்த முகாமையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story