காவல்துறை சார்பில் கேரளாவுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் - கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அனுப்பி வைத்தனர்


காவல்துறை சார்பில் கேரளாவுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் - கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அனுப்பி வைத்தனர்
x
தினத்தந்தி 21 Aug 2018 9:42 PM GMT (Updated: 21 Aug 2018 9:42 PM GMT)

காவல்துறை சார்பில் கேரளாவுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அனுப்பி வைத்தனர்.

வேலூர்,

கேரள மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருவாய்த்துறை, உணவு பாதுகாப்புத்துறை, பொதுசுகாதார துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலமாகவும், தன்னார்வ அமைப்புகள் மூலமாகவும் நேற்று முன்தினம் ரூ.1 கோடியே 69 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் 8 லாரிகள் மூலம் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதுபோல வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, பிஸ்கெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருட்கள், போர்வை, வேட்டி, சேலை உள்ளிட்ட துணிமணிகள் சேகரிப்பட்டன. அவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து 2 லாரிகளில் கேரளாவுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் லாரிகளை கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர். நிவாரண பொருட்கள் சென்ற 2 லாரிகளுடன் ஒரு லாரிக்கு 2 போலீசார் என 4 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அதிவீரபாண்டியன், ஆசைதம்பி, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story