கொளகம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்


கொளகம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 22 Aug 2018 4:30 AM IST (Updated: 22 Aug 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

கொளகம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொளகம்பட்டியில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அத்துடன் ஒகேனக்கல் குடிநீரும் வினியோகம் செய்யப்பட்டது.

கடந்த சில தினங்களாக இந்த கிராமத்திற்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. மேலும் 3 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யும் தண்ணீரும் வீட்டிற்கு 3 அல்லது 4 குடம் அளவிற்கே கிடைத்ததால் குடிநீர் பற்றாக்குறை நிலவியது. இதனால் இந்த பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று மாலை கொளகம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அமரவேல் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 நாட்களில் குடிநீர் வினியோகம் சீர் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story