லாரி மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை - குழந்தை இல்லாததால் விபரீத முடிவு


லாரி மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை - குழந்தை இல்லாததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 22 Aug 2018 3:36 AM IST (Updated: 22 Aug 2018 3:36 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை இல்லாததால் லாரி மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வேலூர்,

வேலூர் கன்சால்பேட்டை இந்திராநகரை சேர்ந்தவர் குமரேசன் (வயது 50), லாரி மெக்கானிக். இவருடைய மனைவி செல்வி (45). இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. அதனால் பல்வேறு கோவில்களுக்கு சென்று குழந்தை வரம் வேண்டி சாமி தரிசனம் செய்துள்ளனர்.

மேலும் மருத்துவமனை உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனாலும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. அதனால் குமரேசன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். நள்ளிரவில் குமரேசன் வீட்டு கூரையின் மூங்கில் கம்பில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட செல்வி கதறி அழுதார்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லாததால் குமரேசன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story