நடுரோட்டில் மூதாட்டி பிணத்தை வைத்து பொதுமக்கள் சாலை மறியல்


நடுரோட்டில் மூதாட்டி பிணத்தை வைத்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Aug 2018 4:02 AM IST (Updated: 22 Aug 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் வேலி அமைத்ததால் சூளகிரியில் நடுரோட்டில் மூதாட்டியின் பிணத்தை வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சூளகிரி,


கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கீழத்தெருவில் உள்ள மலையடிவாரத்தில் 100-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மக்கள் யாராவது இறந்தால் அவரது உடலை கிருஷ்ணேபாளையத்தில் உள்ள சுடுகாட்டுக்கு சென்று இறுதி சடங்கு செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் நிலத்தை வாங்கிய தனி நபர் வழியை மறித்து வேலி அமைத்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பெத்த அக்கம்மா(வயது 75) என்ற மூதாட்டி இறந்தார். இதையடுத்து அவரது உடலை கிருஷ்ணேபாளையத்தில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல முடியாமல் அவரது உறவினர்கள் தவித்தனர். காலம், காலமாக இறந்தவரின் உடல்களை அங்கே சென்று இறுதிசடங்கு செய்து வரும் நிலையில் தனிநபர் வழியை மறித்து வேலியை போட்டதால் தங்களால் மூதாட்டி உடலை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக கவலை அடைந்தனர்.

பின்னர் சுடுகாட்டுக்கு செல்ல வழி ஏற்படுத்தி கொடுக்க கோரி நேற்று மாலை 3 மணிக்கு சூளகிரி டேம்ரோட்டில் மூதாட்டி பிணத்தை வைத்து உறவினர்கள், பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நடுரோட்டில் பிணத்துடன் மறியலில் ஈடுபட்டதால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் சுடுகாட்டுக்கு செல்லும் வழியை தனிநபர் மறித்ததால் தான் மூதாட்டி உடலை எடுத்து செல்ல முடியவில்லை. எனவே எங்களுக்கு சுடுகாட்டுக்கு செல்ல வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதுவரை தொடர்ந்து மறியலில் ஈடுபடுவோம் என்று கூறினார்கள்.

இதையடுத்து போலீசார், சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக சுடுகாட்டுக்கு செல்லும் வேலியை அப்புறப்படுத்தினார்கள். அதன்பிறகு நடுரோட்டில் வைத்திருந்த மூதாட்டி பிணத்தை உறவினர்கள் எடுத்து கொண்டு இறுதி சடங்கு செய்வதற்காக சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story