வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்ற திரண்டு வந்த விவசாயிகள்


வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்ற திரண்டு வந்த விவசாயிகள்
x
தினத்தந்தி 22 Aug 2018 4:56 AM IST (Updated: 22 Aug 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே குளத்துக்கு நீர் வரும் வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேடசந்தூர், 


வேடசந்தூர் அருகே உள்ள ஆர்.கோம்பை தொப்பையசுவாமி மலைப்பகுதியில் மழைக்காலத்தில் வரும் நீர் வாய்க்கால் மூலம் மலையடிவாரத்தில் செண்டுவழி கிராமத்தில் உள்ள நவக்குளத்தில் சேகரிக்கப்படும். பின்னர் அங்கு இருந்து ஆத்தூர்பிள்ளையூரில் உள்ள கல்லுக்குளத்துக்கு வந்து சேரும். இந்த குளங்கள் மூலம் அந்த பகுதியில் சுமார் 400 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பயன் அடையும் வகையில் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.

இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக குளங்களுக்கு வரும் வாய்க்காலில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார். இதனால் மழைக்காலத்தில் குளத்துக்கு வரும் நீர் வள்ளுவர் நகருக்குள் புகுந்து விடுகிறது. எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் ஆக்கிரமிப்பை அகற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் எம்.ஆர்.முத்துச்சாமி தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சி.எஸ்.முத்துச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சவடமுத்து மற்றும் விவசாயிகள் ஏராளமானவர்கள் ஆத்தூர்பிள்ளையூருக்கு திரண்டு வந்தனர். அங்கு வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முத்தாகவுண்டனூரை சேர்ந்த சிலர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு அவர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இதுகுறித்து தகவலறிந்த எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வேடசந்தூர் தாசில்தார் சுரேஷ் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் கவுசல்யா மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகள் சங்கத்தினரிடம் நீர் வழிப்பாதையை முறையாக அளவீடு செய்ய இன்னும் ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story