நாங்குநேரி அருகே ஆசிரியை வீட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


நாங்குநேரி அருகே ஆசிரியை வீட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Aug 2018 3:30 AM IST (Updated: 22 Aug 2018 7:04 PM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி அருகே ஆசிரியை வீட்டை உடைத்து 50 பவுன் நகைகளை கொள்ளயடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

இட்டமொழி, 

நாங்குநேரி அருகே ஆசிரியை வீட்டை உடைத்து 50 பவுன் நகைகளை கொள்ளயடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கேந்திர வித்யாலயா பள்ளி ஆசிரியை 

நெல்லை மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர் ஜாண்சன்(வயது50). இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி பத்மஜாராணி(40). இவர்களுக்கு ஹேரிசன்(15) என்ற மகன் உள்ளார்.

பத்மஜாராணி தெற்கு விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படைத்தள வளாகத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக வேலைபார்த்து வந்தார். இதனால், இவர்கள் குடும்பத்தினர் பள்ளி வளாக குடியிருப்பில் வசித்து வந்தனர்.

வாடகை வீட்டில்... 

இந்த நிலையில் பத்மஜாராணிக்கு ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள கேந்திர வித்யாலாயா பள்ளிக்கு மாறுதல் வந்தது. இதை தொடர்ந்து ஜாண்சன் கேந்திர வித்யாலயா பள்ளி வளாக குடியிப்பை காலி செய்து விட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாங்குநேரி அருகில் உள்ள பரப்பாடி காமராஜ் நகர் மெயின் ரோட்டில் உள்ள தர்மராஜ் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியேறினார்.

50 பவுன் கொள்ளை 

கடந்த 8–ந் தேதி இந்த வீட்டை பூட்டி விட்டு ஜாண்சன் தனது மனைவி பத்மஜாராணி மற்றும் மகனுடன் கடப்பாவுக்கு சென்றார். இதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று நள்ளிரவில் வீட்டு கதவை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 50 பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.12 லட்சமாகும்.

வீட்டுக்கதவு உடைந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் நேற்று வடக்கு விஜயநாராயணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெர்ஜின் சேவியோ மற்றும் போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு 

போலீஸ் துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டு, அது வீட்டை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த கொள்ள சம்பவம் குறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வீட்டில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

ஆசிரியை வீட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story