விநாயகர் சதுர்த்தி விழாவில் காகித கூழ், களிமண் சிலைகளை வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும், கலெக்டர் பேச்சு
விநாயகர் சதுர்த்தி விழாவில் காகித கூழ், களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ஹரிகரன் கூறினார்.
கோவை,
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 13–ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தி, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்வது வழக்கம்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கி பேசியதாவது:–
கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் அதனை தொடர்ந்து நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போலீசார் சட்டம், ஒழுங்கு தொடர்பான பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும் அமைப்பினர் போலீசாரின் அனுமதி பெற்று 24 மணி நேரமும் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் காகித கூழ் மற்றும் களி மண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே வைத்து வழிபட வேண்டும். மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் அனுமதித்து உள்ள எளிதில் கரையக்கூடிய வர்ணங்களை மட்டுமே தீட்டி இருக்க வேண்டும். சிலை தயாரிப்பவர்கள் ‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ்‘ கொண்டு சிலை செய்து விற்பனை செய்யக்கூடாது.
இதனை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லும் போது கடந்த ஆண்டு சென்ற பாதையிலேயே இந்த ஆண்டும் செல்ல வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
தீயணைப்பு துறையினர், மருத்துவ துறையினர் தயார்நிலையில் இருக்க வேண்டும். எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.