அரசு சிறப்பாக நடைபெற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது அவசியம்
தமிழக அரசு சிறப்பாக நடைபெற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது அவசியம் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.
வேலூர்,
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வேலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுவதா, வேண்டாமா என்பது குறித்து கட்சியின் உயர்மட்டக்குழுவை கூட்டி ஆலோசிக்கப்படும். அதில் போட்டியிடலாம் என்று முடிவு செய்தால் போட்டியிடுவோம். சட்டமன்ற தேர்தலைபொறுத்தவரை 2021-தான் எங்கள் இலக்கு. அந்த தேர்தலில் வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வுசெய்து போட்டியிடுவோம்.
எங்கள் கட்சி 12-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. எனக்கு 22 ஆண்டு அரசியல் அனுபவம் உள்ளது. இதுவரை நாங்கள் ஒரு இயக்கத்தை சார்ந்தே வந்துவிட்டோம். உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடுவோம்.
தமிழ்நாட்டில் இரண்டு இயக்கங்களின் தலைவர்கள் மறைந்துள்ளனர். அதனால் அரசியலில் வெற்றிடம் என்பது இல்லை. யார் வெற்றிபெறுவார்கள் என்பது மக்கள் கையில் உள்ளது. வெற்றிக்கு நாங்களும் தயாராகி வருகிறோம். புதிதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு அரசியலில் வெற்றிடம் இருப்பதாக தெரியலாம்.
தமிழக அரசைபொறுத்தவரையில் நல்லதை பாராட்டுவோம், தவறுகளை சுட்டிக்காட்டுவோம். 8 வழி பசுமைச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தாமல், விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் வெளிநாடுகளை போன்று உயர்மட்ட சாலையாக அமைக்கலாம் என்று எங்கள் கருத்தை பதிவுசெய்திருக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்கக்கூடாது.
உள்ளாட்சி அமைப்புகள் இல்லையென்றால் ஒரு அரசு நன்றாக செயல்படமுடியாது. அதனால் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துவது மிகவும் அவசியமானது. தமிழக அரசு மீளமுடியாத அளவுக்கு கடனில் உள்ளது. எந்தவரி விதித்தாலும் பாதிப்பு வரும். டாஸ்மாக் கடைகளை மூடினால் பெரிய இழப்பு ஏற்படும் என்கிறார்கள். சிகரெட், மது போன்றவற்றுக்கு வரியை கூட்டலாம். அது மக்களை பாதிக்காது.
கேரளாவில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரூ.700 கோடி வழங்குவதை பெற மத்திய அரசு மறுத்துவிட்டது. கேரளாவை சேர்ந்த 60 சதவீதம்பேர் அங்கு பணிபுரிவதால் அவர்கள் இந்த தொகையை வழங்க முன்வந்துள்ளனர். எனவே மத்திய அரசு வெளிநாட்டு கொள்கைக்கு உட்பட்டு நல்ல முடிவை எடுக்கவேண்டும்.
ஆற்றில் வெள்ளம் வந்தாலும் கடைமடை பகுதிக்கு தண்ணீர்வரவில்லை. எனவே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story