குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த தொழிலாளி சாவு


குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 23 Aug 2018 3:30 AM IST (Updated: 23 Aug 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரத்தில் உள்ள குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரத்தில் வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடி உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகனங்களை சோதனை செய்ய 24 மணி நேரமும் அங்கு வனத்துறை ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். சோதனை சாவடியின் பின்பகுதியில் வனவிலங்குகள் நீர் அருந்துவதற்கு வசதியாக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தொட்டியில் எப்போதும் நீர் நிரப்பப்பட்டு இருக்கும். நேற்று காலை குடிநீர் தொட்டியில் ஒரு ஆண் பிணம் மிதப்பதை பார்த்து வனத்துறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவர்கள் திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டனர்.

இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுக தொடங்கிவிட்டது. இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக உடலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்த நபர் இரண்டலபாறையை சேர்ந்த சூசை மாணிக்கம் மகன் வேளாங்கண்ணி (வயது 45) என்பது தெரியவந்தது.

தொழிலாளியான வேளாங் கண்ணி ஆடு மேய்ப்பதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story