கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது வி‌ஷவாயு தாக்கி வாலிபர் சாவு? உறவினர்கள் சாலை மறியல்


கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது வி‌ஷவாயு தாக்கி வாலிபர் சாவு? உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Aug 2018 4:30 AM IST (Updated: 23 Aug 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் வில்லூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது வி‌ஷவாயு தாக்கி வாலிபர் இறந்ததாக அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருமங்கலம்,

பேரையூரைச் சேர்ந்தவர் சங்கர்பாபு (வயது30). இவர் வில்லூர் அருகே உள்ள உவரி கிராமத்தில் ஒரு வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது குழாயை தொட்டிக்குள் இறக்கியபோது வாலிபர் மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் வாலிபர் வி‌ஷவாயு தாக்கி இறந்ததாக கூறி அவருடைய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்தனர். அப்போது அவர்கள் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். அப்போது அங்குவந்த போலீசார், வாலிபர் வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இறந்த வாலிபரின் மனைவி மாரீஸ்வரி மற்றும் ஆதிதமிழர் பேரவையைச் சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் திரண்டு திருமங்கலம்– விருதுநகர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து திருமங்கலம் தாசில்தார் நாகரத்தினம், பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பரமசிவம், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் அங்குவந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இறந்தவர் உடலை மதுரை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அறிக்கையை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து வாலிபரின் உறவினர்கள் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story