காவிரி ஆற்று பாலத்தில் இருந்து தவறிவிழுந்த சிறுவனின் கதி என்ன? பெற்றோர், உறவினர்கள் தவிப்பு


காவிரி ஆற்று பாலத்தில் இருந்து தவறிவிழுந்த சிறுவனின் கதி என்ன? பெற்றோர், உறவினர்கள் தவிப்பு
x
தினத்தந்தி 23 Aug 2018 4:30 AM IST (Updated: 23 Aug 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

மோகனூர்-வாங்கல் காவிரி ஆற்று பாலத்தில் தவறி விழுந்த குழந்தையின் கதி என்ன என தெரியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

மோகனூர்,

கரூர் எல்.ஜி.பி. நகரில் வசித்து வருபவர் பாபு (வயது 39). இவர் பங்குசந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய மனைவி ஷோபா (30). இவர்களின் ஒரே மகன் தன்வந்த் (வயது 4).

நேற்று முன்தினம் பாபு தனது மகனை பள்ளியில் விடுவதற்காக தனது காரில் டிரைவருடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தன்வந்த் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்க்க வேண்டும் என ஆசையுடன் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து காரில், நாமக்கல் மாவட்டம், மோகனூர்-வாங்கல் காவிரி ஆற்று பாலத்திற்கு வந்தனர். அங்கு பாலத்தில் நின்றபடி பாபு தனது மகனை கையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதை வேடிக்கை காண்பித்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தன்வந்த் தண்ணீரை பார்க்கும் ஆர்வத்தில் எட்டிப்பார்த்ததாக தெரிகிறது. இதில் அவன் தந்தையின் கையில் இருந்து தவறி ஆற்றில் விழுந்து விட்டான். இதில் சிறுவன் ஆற்றுநீரில் அடித்து செல்லப்பட்டான். ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மீட்பு பணியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றுடன் 2 நாட்கள் ஆகியும் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவனின் கதி என்னவென்று தெரியாமல் பெற்றோர், உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

இதனிடையே சம்பவம் நடந்த மோகனூர்-வாங்கல் காவிரி ஆற்றுப்பாலத்தில், பொதுமக்கள் கைப்பிடி சுவர் மீது ஏறவோ, எட்டிப்பார்க்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது, ஆற்றில் இறங்கி குளிக்க, துணி துவைக்கவும் கூடாது என ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் நேற்று எச்சரிக்கை விடுத்தனர்.

இதற்காக பாலத்தின் தூண்களில் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு இருந்தன. மேலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அறிவிப்பு தட்டிகளையும் பாலத்தில் போலீசார் கட்டி வைத்திருந்தனர். அதே நேரத்தில் இந்த பாலத்தில் தொடர்ந்து போலீசார் ரோந்து சென்று பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

Next Story