காதல் திருமணத்தை தள்ளி வைத்ததால் நடன பயிற்சி பள்ளி ஆசிரியர் தற்கொலை


காதல் திருமணத்தை தள்ளி வைத்ததால் நடன பயிற்சி பள்ளி ஆசிரியர் தற்கொலை
x
தினத்தந்தி 23 Aug 2018 4:15 AM IST (Updated: 23 Aug 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

காதலியுடன் ஏற்பாடு செய்த திருமணத்தை தள்ளி வைத்ததால் பயிற்சி பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று போலீசில் சிக்கியது.

புதுச்சேரி,

புதுவை கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன்(வயது 65). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மகன் ராமதாஸ்(28). இவர் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் வாடகைக்கு கட்டிடம் எடுத்து அங்கு அன்னை கலைக்கூடம் எனும் பெயரில் நடனபயிற்சி பள்ளி நடத்தி வந்தார். இதில் பரதநாட்டியம், கராத்தே, வாய்ப்பாட்டு போன்றவை கற்றுக்கொடுத்து வந்தார். இங்கு ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் நடனம் கற்று வந்தனர்.

இந்த நிலையில் ராமதாஸ் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் திருமண ஏற்பாடு செய்தனர். அப்போது பெண் வீட்டார் பெண் படித்து முடிக்க வேண்டும். அதனால் ஒரு வருடம் திருமணத்தை தள்ளிப்போடலாம் என கூறியுள்ளனர்.

உடனே ராமதாஸ் இது தொடர்பாக தான் காதலித்த பெண்ணை கேட்டுள்ளார். அந்த பெண்ணும் பெற்றோர் சொல்வதை கேட்டுதான் நான் நடப்பேன் என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ராமதாஸ் கடந்த சில நாட்களாக வீட்டிற்கு செல்லாமல் பயிற்சி பள்ளியிலேயே தங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமதாஸ் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று பெற்றோரை பார்த்து பேசியுள்ளார். அப்போது அவரது சித்தப்பா புகழேந்தி தினமும் வீட்டிற்கு வராமல் ஏன் இப்படி வெளியிலேயே தங்குகிறாய்? என கேட்டுள்ளார். அதற்கு ராமதாஸ் அவரிடம் நாளை காலை 10 மணிக்கு லாஸ்பேட்டை பயிற்சி மையத்திற்கு வாருங்கள், உங்களிடம் முக்கியமான வி‌ஷயம் பேசவேண்டும் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

அண்ணன் மகன் ஏதோ மனகஷ்டத்தை தன்னிடம் பகிர்ந்துக்கொள்ள எண்ணுகிறார் என நினைத்த புகழேந்தி நேற்று முன்தினம் காலை லாஸ்பேட்டை சென்றுள்ளார். அப்போது அங்கு ராமதாசின் பயிற்சி பள்ளி கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் ராமதாஸ் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த புகழேந்தி இதுபற்றி லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்–இன்ஸ்பெக்டர் அண்ணாசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமதாஸின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது பயிற்சி பள்ளியில் ஒரு கடிதம் சிக்கியது. அதில், ‘என் வாழ்க்கையில் நான் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என எனக்கு தெரியவில்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள். நான் தற்கொலை செய்து கொண்டேன் என்று மாணவர்கள் கவலைப்பட வேண்டாம்’ என்று எழுதப்பட்டு இருந்தது.


Next Story