கன்னியக்கோவில் சந்திப்பில் ஆட்டோ–மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு


கன்னியக்கோவில் சந்திப்பில் ஆட்டோ–மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 23 Aug 2018 4:45 AM IST (Updated: 23 Aug 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

கன்னியக்கோவில் சந்திப்பு பகுதியில் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தொழிலாளி இறந்தார்.

பாகூர்,

புதுச்சேரி மாநிலம் கன்னியக்கோவில் கிராமத்தை அடுத்த வார்க்கால் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் பிரவீன்ராஜ் (வயது 22). பி.காம். பட்டதாரியான பிரவீன்ராஜ், அந்த பகுதியில் உள்ள கொசுவர்த்தி சுருள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை பிரவீன்ராஜ் தனது மோட்டார் சைக்கிளில் கடலூருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் கன்னியக்கோவில் கிராமத்துக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பு ரோட்டில் அவர் வந்தபோது ரோடு ஓரமாக நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ திடீரென வலதுபுறம் திரும்பியது. அதனை சற்றும் எதிர்பார்க்காத பிரவீன்ராஜ் மோட்டார் சைக்கிளை திடீரென நிறுத்த முயன்றார். ஆனாலும் ஆட்டோ மீது லேசாக மோதிய மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ரோட்டில் சரிந்து சறுக்கியபடி ரோட்டின் எதிர்திசையில் சிறிது தூரம் சென்றது.

அப்போது ரோட்டின் எதிர்திசையில் பக்ரீத் பண்டிகைக்காக கடலூர் நெல்லிக்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற கோட்டக்குப்பத்தை சேர்ந்த இலியாஸ்(வயது 32), தன்னுடைய மோட்டார் சைக்கிளில் மனைவி ராஷிதா, மகன் முகமது ரோகன் (6), மகள் ராஷியா (2) ஆகியோருடன் திரும்பி வந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் விபத்தில் சிக்கிய பிரவீன்ராஜின் மோட்டார் சைக்கிள் சறுக்கியபடி எதிர்திசையில் குறுக்காக வந்ததால் இலியாசின் மோட்டார் சைக்கிளும், பிரவீன் ராஜின் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரவீன்ராஜ், ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே பரிதாபமாகச் செத்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இலியாஸ், அவருடைய மனைவி ராஷிதா ஆகியோர் அவர்களின் இரண்டு குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். இதில் இலியாசும், அவருடைய மனைவியும் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்களிள் இரண்டு குழந்தைகளும் லேசான காயத்துடன் தப்பின. அந்த குழந்தைகள் விபத்தில் சிக்கி மயங்கிக்கிடந்த தங்களின் தாய், தந்தை அருகில் சென்று அவர்களை எழுப்ப முயன்று அழுதனர்.

இந்த விபத்தை பார்த்ததும் அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து, பலத்த காயத்துடன் மயங்கிக் கிடந்த இலியாஸ், அவருடைய மனைவி ராஷிதா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். லேசான காயம் அடைந்த அவர்களின் குழந்தைகளும் அதே ஆஸ்பத்திரியில் பெற்றோருடன் உள்ளனர்.

விபத்துபற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் பலியான பிரவீன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், அதில் உயிர் பலி ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் ஏற்கனவே அரசுக்கு புகார் தெரிவித்து அந்த சந்திப்பு பகுதியில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும் என்று அரசிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று நடந்த இந்த விபத்து அப்பகுதி மக்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

அதனால் அவர்கள் அரசை கண்டித்து அங்கு சாலை மறியல் செய்வதற்காக நடுரோட்டில் திரண்டனர். அதனால் அந்த வழியாக நடந்த போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த போக்குவரத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து மறியல் செய்யும் முயற்சியை கைவிடச் செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story