கரும்பு கோட்ட உதவியாளரை சிறைபிடித்து விவசாயிகள் திடீர் போராட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே கரும்பு கோட்ட உதவியாளரை சிறைபிடித்து விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர், சேமங்கலம், மேல்தணியாலம்பட்டு, கீழ்தணியாலம்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 223 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் செய்தனர். இந்த கரும்புகளை அறுவடை செய்ய நெல்லிக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலையில் பதிவு செய்து அதற்கான கடனுதவியையும் பெற்றனர். கடந்த சில நாட்களாக கரும்புகளை நெல்லிக்குப்பம் ஆலைக்கு அரவைக்காக அனுப்பி கொண்டிருந்தனர்.
இதனையறிந்த பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள், விவசாயிகளிடம் சென்று மற்ற ஆலைக்கு கரும்புகளை அனுப்ப வேண்டாம், கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கே கரும்புகளை அரவைக்கு அனுப்புமாறு கூறினர். அதற்கு விவசாயிகள் கூறும்போது, கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பினால் கரும்புக்கு பணம் உடனுக்குடன் வராது, செலவும் அதிகமாகும், அதுமட்டுமின்றி ஏற்கனவே அனுப்பிய கரும்புக்குரிய பணமும் விவசாயிகளுக்கு வழங்காமல் பாக்கி உள்ளது. இதனால் நாங்கள் நெல்லிக்குப்பம் ஆலைக்கு பதிவு செய்து விட்டோம் என்றனர்.
இந்நிலையில் அரசூர் கரும்பு கோட்ட உதவியாளர் கோபாலகிருஷ்ணன், நேற்று காலை ஆனத்தூரில் இருந்து கரும்புகளை நெல்லிக்குப்பம் ஆலைக்கு அனுப்ப இருந்த விவசாயிகளிடம் சென்று நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்பக்கூடாது என கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், கரும்பு கோட்ட உதவியாளர் கோபாலகிருஷ்ணனை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவரிடம் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் கரும்பு பெருக்கு அலுவலர் ஆனந்தன், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அரிதாஸ், அருணாசலம் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்டனர்.
இந்த சம்பவத்தால் கரும்பு விவசாயிகள் அனைவரும் நெல்லிக்குப்பம் ஆலைக்கு கரும்புகளை அனுப்ப முடியாமல் தவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்ப எதிர்ப்பு தெரிவிக்கும் அதிகாரிகளை கண்டித்து அரசூர்- பண்ருட்டி சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நெல்லிக்குப்பம் ஆலைக்கே கரும்புகளை அனுப்பலாம் என்று விவசாயிகளிடம் போலீசார் தெரிவித்தனர். அதன் பிறகு விவசாயிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story