மும்பையில் வாஜ்பாய்க்கு நினைவு சின்னம் : முதல்-மந்திரி அறிவிப்பு


மும்பையில் வாஜ்பாய்க்கு நினைவு சின்னம் :  முதல்-மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Aug 2018 4:20 AM IST (Updated: 23 Aug 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் வாஜ்பாய்க்கு நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று அறிவித்தார்.

மும்பை,

முன்னாள் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16-ந் தேதி உயிரிழந்தார். மும்பையில் நேற்று அவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், உத்தரபிரதேச கவர்னர் ராம் நாயக், ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல், மாநில பா.ஜனதா தலைவர் ராவ் சாகேப் தன்வே, மந்திரிகள் சுதிர் முங்கண்டிவார், சந்திரகாந்த் பாட்டீல், வினோத் தாவ்டே மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதில் மாநிலத்தில் உள்ள கோதாவரி, பஞ்சகங்கா மற்றும் சந்திரபாகா உள்ளிட்ட 14 ஆறுகளில் கரைப்பதற்காக வாஜ்பாயின் அஸ்தியை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் முதல்-மந்திரி கூறியதாவது:-

நாட்டை நேசிப்பதற்கான பாதையை வாஜ்பாய் காட்டியுள்ளார். நாம் அவரை தலைவணங்கி அவர் வகுத்து தந்த பாதையில் பயணிக்க வேண்டும். அவர் தன் சித்தாந்தங்களை வாய்வழியாக மட்டுமே சொல்லவில்லை. அதன்படி வாழ்ந்து காட்டினார்.

அவர் இந்த நாட்டிற்கு தான் முதலில் முன்னுரிமை அளித்தார். அடுத்ததாக கட்சிக்கு, கடைசியில் தான் அவர் தன்னை பற்றி சிந்தித்தார். வாஜ்பாய் ஒன்றும் பொருளாதார மேதை இல்லை. ஆனால் மனித வளர்ச்சி தேவையானவற்றை அவர் அறிந்திருந்தார். அவர் சமூக நீதியை வலியுறுத்தினார்.

அவருக்காக மும்பையில் மராட்டிய அரசு நினைவு சின்னம் அமைக்கும். அதற்கான வேலைகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story