கட்டிட தொழிலாளி கொலை: உறவினர் உள்பட 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு


கட்டிட தொழிலாளி கொலை: உறவினர் உள்பட 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Aug 2018 4:35 AM IST (Updated: 23 Aug 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நடந்த கட்டிட தொழிலாளி கொலையில் உறவினர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்,

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் உட்கண்டி என்கிற மதுசூதனன்(வயது 32), கட்டிட தொழிலாளி. இவரை கடந்த 20-ந் தேதி மர்ம ஆசாமிகள் 2 பேர் கடத்தி சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தனர். மேலும் அவருடைய உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசி சென்றனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மதுசூதனன் உடலை மீட்டனர். இதுதொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கொலையில் மதுசூதனனின் உறவினர் வசந்த் மற்றும் அவருடைய நண்பர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேல் விசாரணையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முன்விரோதம் காரணமாக வசந்த் கழுத்தை, கொலையுண்ட மதுசூதனன் அறுத்துள்ளார். இதில் அவர் உயிர்பிழைத்தார். இதையடுத்து ஆத்திரத்தில் இருந்த வசந்த் தனது நண்பர் தட்சிணாமூர்த்தியுடன் சேர்ந்து மதுசூதனனை கொலை செய்ய முடிவு செய்தார்.

சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் தூங்கி கொண்டிருந்த மதுசூதனனை அவர்கள் இருவரும் தாக்கி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றதை சிலர் பார்த்துள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் வசந்த், தட்சிணாமூர்த்தி ஆகிய இருவரும் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story