சேத்தியாத்தோப்பு அருகே தீக்குளித்து பெண் தற்கொலை


சேத்தியாத்தோப்பு அருகே தீக்குளித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 23 Aug 2018 3:30 AM IST (Updated: 23 Aug 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சேத்தியாத்தோப்பு,


சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பாளையம் சேர்ந்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 52). இவரது மனைவி பவழக்கொடி(42). சுப்பிரமணியனுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பிரபு என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பவழக்கொடி வீட்டில் தனியாக இருந்த போது, அங்கு வந்த பிரபு முன்விரோதம் காரணமாக அவரை ஆபாசமாக திட்டி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த பவழக்கொடி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.


இதில் உடல் முழுவதும் தீ பரவி எரிந்ததில் பவழக்கொடி வலியால் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பவழக்கொடி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story